ADDED : ஆக 09, 2025 03:26 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் கான்பா சாய்பு தர்ஹாவில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து சந்தனம் பூசும் விழாவிற்கான கொடியேற்று விழாவை கொண்டாடினர்.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மூன்றாம் அல்லது கடைசி வியாழக்கிழமை சந்தனம் பூசு விழா நடைபெறும். இவ்விழாவில் சந்தன குடம் எடுத்தல், சந்தனம் பூசுதல் மற்றும் கொடியேற்றுதல் என முப்பெரும் விழாவாக முஸ்லிம்களுடன் ஹிந்துக்கள் இணைந்து கொண்டாடுவர்.
திருப்புத்துார் புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினரால் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றன. நேற்று முன்தினம் பெரியகடை வீதியிலுள்ள அரங்கில் மத நல்லிணக்க கூட்டு பிரார்த்தனை நடந்தது. அலாவுதீன் ராவுத்தர் டிரஸ்ட் நிர்வாகி சையது இப்ராஹிம் தலைமையில், அபுதாஹீர் ஆலிம் துவா ஓதினார்.
பின்னர், பூக்கடை சங்க பாண்டியன் தலைமையில் புஷ்ப வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சந்தன குடம், பிறை கொடி ஏந்தி மத நல்லிணக்க கூட்டு பிரார்த்தனைக்கு பல வகை பொருட்களை சுமந்து ஊர்வலமாக கான்பா சாயபு தர்ஹாவிற்கு வந்தனர். தர்ஹா பொறுப்பாளர் அலாவுதீன் வரவேற்றார்.
தொடர்ந்து கான்மியான், சையது மியான் அவுலியாக்கள் கோரிக்கு சந்தனம் பூசி, பட்டு வஸ்திரம் சாத்தி, சந்தனம் தெளித்து பூ சூடி மத நல்லிணக்க கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் பிறை கொடியினை ஹிந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அங்கிருந்த கொடிக் கம்பத்தில் ஏற்றினர்
தர்கா டிரஸ்ட் நிர்வாகி ரோஜா மகதுான் நன்றி கூறினார்.