/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உடல் உறுப்பு தானம் செய்து ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உலகுக்கு சொன்னவர் கண்ணப்பர் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
/
உடல் உறுப்பு தானம் செய்து ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உலகுக்கு சொன்னவர் கண்ணப்பர் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
உடல் உறுப்பு தானம் செய்து ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உலகுக்கு சொன்னவர் கண்ணப்பர் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
உடல் உறுப்பு தானம் செய்து ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உலகுக்கு சொன்னவர் கண்ணப்பர் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
ADDED : ஏப் 23, 2025 05:54 AM
தேவகோட்டை : இறைவனுக்கே கண்ணை கொடுத்து உடல் உறுப்பு தானத்தை உலகுக்கு சொன்னவர் கண்ணப்ப நாயனார் என இலக்கிய மேகம் சீனிவாசன் கூறினார்.
தேவகோட்டையில் நடக்கும் பிரவசன கூட்டத்தில் பெரியபுராணம் சொற்பொழிவில் கண்ணப்பர் பற்றி சகடபுரம் வித்யா பீடம் சீனிவாசன் பேசியதாவது: அன்பு என்பது இந்த உலகை ஆள்கின்ற சக்தி . அறச் செயல்களுக்கு மட்டுமல்ல வீரச் செயல்களுக்கும் கூட அன்பு தான் துணையாக உள்ளது.
நாம் இறைவனின் மேல் செலுத்தும் அன்பிற்கு பெயர் பக்தி, இறைவன் நம் மேல் செலுத்தும் அன்பிற்கு பெயர் அருள். அளப்பரிய பக்தியை செய்தவர்களில் முதன்மையானவர் கண்ணப்பர் என்பது வரலாறு.
நம்மைப் போன்ற சாதாரண மக்கள் இறைவன் நமக்கு என்ன தருவார் என பார்க்கின்றோம். ஆனால் நாயன்மார்களோ இறைவனுக்கு நாம் என்ன தர முடியும் என்று யோசித்து அப்படியே செய்தார்கள்.
முதலில் கண் தானம் செய்ததன் மூலம் இன்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள உடல் உறுப்பு தானத்தை உலகுக்கு சொன்ன முதலாமவர் கண்ணப்பர் நாயனார் என்பதை மறுக்க முடியாது.
ஒரு சாதாரண வேடன் பக்தியினால் செய்த செயல் யாவும் இறைவனுக்குப் உகந்ததாக இருந்துள்ளது. காட்டில் போட்டு தேய்ந்த செருப்பு சிவபெருமான் உச்சிக்கே போனது.
அவன் கடித்து சுவைத்து பார்த்த மாமிசம் இறைவனுக்கு அமுதத்தை விட மேலாக இருந்தது. அவன் வாயில் இருந்த எச்சில் நீர் கங்கையை விட மேலானதாக இருந்துள்ளதாக ஆதிசங்கரர் வியந்து பாராட்டுகிறார்.
கண்ணப்பனைப் போல் அன்பாளனை பார்த்த பின்னர் என்னை போன்றவனை எப்படி ஏற்றுக் கொண்டாய் என மாணிக்கவாசகர் கண்ணப்பரை வியந்து போற்றுக்கின்றார்.
இன்று எல்லா கோவில்களையும் பரிகாரத் தலமாக மாற்றி விட்டோம். பாரம்பரியமிக்க பிரபலமான கோவில்களில் இறைவனின் கருவறையை கூட சுற்றி வந்து வழிபடும் உரிமை பறிபோய் வருகிறது. எதற்கெடுத்தாலும் கட்டணங்களாக மாறி வருகிறது.
கணணப்பரின் வரலாறு பக்தியுடன் இறைவனை வழிபாடு செய்தால் இறைவனே நேரில் வந்து அருள்புரிவார் என்பதற்கான அடையாளமாகும்.
பணத்தின் மூலம் இறைவனின் அருளை பெற்று விட முடியுமா என்றால் இயலாது என்பதே உண்மையாகும். புறச் சடங்குகளில் மட்டும் பக்தியை கொண்டாடும் நாம் அகத்திலும் அன்பெனும் பக்தியை செய்திட வேண்டும் என்பது அனைவரின் கடமையாகும் என்றார்.

