ADDED : ஜன 25, 2025 01:50 AM
கீழடி:தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடக்கும். 10ம் கட்ட அகழாய்வு கடந்தாண்டு ஜூன் 18ல் தான் தொடங்கப்பட்டது. லோக்சபா தேர்தல் பணி காரணமாக மத்திய அரசு அகழாய்வு பணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை என கூறப்பட்டது.
பணிகள் தாமதமாக தொடங்கியதால் நவம்பர் வரை நடந்தது. கடந்தாண்டு நவம்பரில் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஸ்பெயின் நாட்டிற்கு பயிற்சிக்காக சென்றதாலும் தொடர்ந்து மழை பெய்ததாலும் அகழாய்வு பணிகள் நவ. 16 ல் நிறுத்தப்பட்டன. மீண்டும் நேற்று 10ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது.
9ம் கட்ட அகழாய்வு ஏப்ரலில் தொடங்கி செப்டம்பர் வரை நடந்து முடிந்து 804 பொருட்கள் மட்டுமே கண்டறியப்பட்டன. எனவே 10ம் கட்ட அகழாய்வு வரும் ஏப்ரல் வரை நடத்த தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. அதன்பின் இந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.