/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூர் ரயில் நிலையம் பராமரிப்பு தேவை
/
கோட்டையூர் ரயில் நிலையம் பராமரிப்பு தேவை
ADDED : மே 19, 2023 04:48 AM

காரைக்குடி நகராட்சியை ஒட்டியுள்ளது கோட்டையூர் பேரூராட்சி. அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி, அழகப்பா தொலைதுாரக்கல்வி என பல பள்ளி, கல்லூரிகள் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது.
தவிர அரசு தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்றுவருகின்றனர்.
காரைக்குடி, திருச்சி, மானாமதுரை, விருதுநகர், ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கோட்டையூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை விரும்பியே பயணம் மேற் கொள்கின்றனர்.
இந்த ரயில் நிலையம் போதிய பராமரிப்பின்றி புயல் வந்து அழித்தது போல் சிதைந்து கிடக்கிறது. மின் ரயிலுக்காக வெட்டப்பட்ட மரங்கள் பல ரயில் நிலைய வளாகத்தில் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
பயணிகள் கூறுகையில்;
பல மாதங்களாக ரயில் நிலையம் முழுவதும் வெட்டப்பட்ட மரங்கள் குவிந்து கிடக்கிறது. மரங்களை அகற்றாததால் பாம்பு நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
ரயில் நிலையத்தில் நிற்பதற்கே அச்சமாக உள்ளது. தவிர கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதோடு, குடிநீரும் சுகாதாரமின்றி காணப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பயணிகளில் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.