/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வளர்ந்து வரும் ஊராட்சிகளில் சுகாதாரம் கேள்விக்குறி: கிராம வீதிகளில் தேங்கும் கழிவு, குப்பை
/
வளர்ந்து வரும் ஊராட்சிகளில் சுகாதாரம் கேள்விக்குறி: கிராம வீதிகளில் தேங்கும் கழிவு, குப்பை
வளர்ந்து வரும் ஊராட்சிகளில் சுகாதாரம் கேள்விக்குறி: கிராம வீதிகளில் தேங்கும் கழிவு, குப்பை
வளர்ந்து வரும் ஊராட்சிகளில் சுகாதாரம் கேள்விக்குறி: கிராம வீதிகளில் தேங்கும் கழிவு, குப்பை
ADDED : மே 17, 2025 01:01 AM

சிங்கம்புணரி ஒன்றியத்தில் 30, எஸ்.புதுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ள நிலையில், அவற்றின் உட்கடை கிராமங்கள் 200 க்கும் மேல் உள்ளன. இவற்றில் சில கிராமங்கள் நகர் பகுதிக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.
குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் அப்பகுதியில் அதிகளவில் பெருகி வருகிறது. ஆனால் அவ்வளர்ச்சி வேகத்திற்கு இணையாக அடிப்படை வசதிகள் குறைவாகவே செய்து தரப்படுகிறது. குறிப்பாக கழிவுநீர் வெளியேறுவதற்கான கால்வாய் பெரிய அளவில் இல்லை.
கிராமங்களில் கழிவுநீரை கையாள வீடுகள் முன்பாக உறிஞ்சிக்குழி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிக வீடுகள், நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் இக்குழிகள் பயன்தரவில்லை.
கால்வாய்களும் தேவையான முழு அளவுக்கு இல்லாமல் குறைந்த துாரத்திற்கே கட்டப்படுகிறது. இதனால் மற்ற வீடுகள் முன்பாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலை, காளாப்பூர், சதுர்வேதமங்கலம், எஸ்.எஸ்.கோட்டை, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அங்கு போதிய கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு இல்லை. எஸ் புதுார் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளான கோட்டை நெடுவயல், வலசைபட்டி, உலகம்பட்டி, முசுண்டபட்டி, புழுதிபட்டி உள்ளிட்டவற்றிலும் போதுமான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.
பிரான்மலை, காளாப்பூர் போன்ற ஊராட்சிகள் பேரூராட்சிக்கு இணையாக வளர்ந்து வருவதால் அவற்றை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் கூடுதல் நிதி பெற்று அடிப்படை வசதிகளை கூடுதலாக நிறைவேற்ற முடியும்.
மற்ற ஊராட்சிகளில் நகர் பகுதிக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து கழிவுநீர் கால்வாய்களை அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஒரு கழிவுநீர் கால்வாயை பகுதியாக வெவ்வேறு காலகட்டத்தில் கட்டாமல் ஒரே நேரத்தில் கட்டி முடிக்கும் போது மட்டுமே அது முழுப் பயனையும் தரும். கிராமங்களின் சுகாதார விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டும்.