/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை வசதி இல்லை: பக்தர்கள் அவதி
/
அடிப்படை வசதி இல்லை: பக்தர்கள் அவதி
ADDED : டிச 03, 2024 05:38 AM
திருப்புவனம்: திருப்புவனத்திற்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், வெளியூர் பயணிகள், பக்தர்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் நகரைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் தினசரி மார்க்கெட் மற்றும் வாரந்தோறும் நடைபெறும் சந்தைக்கு தங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் திருப்புவனம் வந்துதான் மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வெளியூர் பயணிகள் வந்து செல்லும் திருப்புவனத்தில் குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை.
வெளியூர்வாசிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வைகை ஆற்றிற்கு செல்ல வேண்டியுள்ளது. அதிலும் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மார்க்கெட் வீதியில் இருந்த கழிப்பறையையும் இடித்து அகற்றிவிட்டு அதில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து விட்டனர்.
இதனால் திருப்புவனத்திற்கு வரவே வெளியூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில்: தினசரி வெளியூர் பயணிகள் அடிப்படை வசதிகளுக்கு தவித்து வருவதுடன், மார்க்கெட் வீதியில் காய்கறி கடைகள் வைத்துள்ள வியாபாரிகளும் தவிப்பிற்குள்ளாகின்றனர்.
தினசரி வியாபாரிகளிடம் பேரூராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் இல்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் வெளியூர் பயணிகள், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.