/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் பஸ் வசதி இல்லாததால் பாதிப்பு
/
சிங்கம்புணரியில் பஸ் வசதி இல்லாததால் பாதிப்பு
ADDED : நவ 30, 2024 06:40 AM

மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நகரமான சிங்கம்புணரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
அனைத்து தேவை, வசதிகளும் இப்பகுதியில் கிடைப்பதால், இங்கு பணிக்கு நிமித்தமாக வருபவர்கள் இங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். இதனால் இத்தாலுகா வேகமாக வளர்ந்து வருகிறது.
அதேநேரம் பொது போக்குவரத்து விஷயத்தில் மட்டும் முறையாக திட்டமிடல் இல்லாததால் இப்பகுதி இன்னும் பின்தங்கியே உள்ளது. சிங்கம்புணரியில் இருந்து மதுரை உள்ளிட்ட தொலைதுார நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. வேறு ஊர்களில் புறப்பட்டு இவ்வழியாக செல்லும் பஸ்களில் தான் பயணிகள் செல்கின்றனர்.
நீண்ட துார பயணங்களுக்கு இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
மேலும் திருப்புத்துார், மதுரை அரசு பஸ் டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் ரூட்டுகளை அடிக்கடி மாற்றி விடுகின்றனர். இதனால் இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
எஸ்.புதுார் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் பொது போக்குவரத்து இயக்க முடியாததால் பல மாணவர்கள் கல்வியை பாதியிலேயே கைவிடும் அபாயம் உள்ளது. சிங்கம்புணரியில் தனியாக பஸ் டெப்போ அமைந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும் என்கிறார்கள் பயணிகள்.
பி.செந்தில்குமார், பா.ஜ., ஒன்றிய பொதுச் செயலாளர், சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பஸ் டெப்போ இல்லாததால் இப்பகுதி மக்களின் தேவைக்கு ஏற்ப மற்ற டெப்போக்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்க முடியவில்லை.
அதிகாரிகள் முறையான நேர இடைவெளி இல்லாமல் பஸ்களை இயக்குகின்றனர். ஏற்கனவே இயங்கும் பஸ்களை சில நேரங்களில் வேறு ஊர்களுக்கு மாற்றி விடுகின்றனர்.
தனியார் பேருந்துகளும் தங்களின் வருமானத்துக்காக ரூட்களை மாற்றி கிராமங்களை புறக்கணிக்கும் நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்வதுமில்லை.
சிங்கம்புணரியில் பஸ் டெப்போ அமைத்து அதன் மூலம் இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் நேரடி பஸ் விட வேண்டும்.
தாலுகாவில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

