/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
/
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதி குறைவு ! மருத்துவமனையை தேடும் எஸ்.புதுார் மக்கள்
ADDED : ஜூலை 05, 2025 12:37 AM

21 ஊராட்சிகளை கொண்ட இவ்வொன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள்உள்ளன. இப்பகுதி மக்களின் மருத்துவ வசதிக்காக எஸ்.புதுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. பிறகு புழுதிபட்டியிலும் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது.
இந்த இரண்டு இடங்களிலும் மருத்துவ வசதி குறைவாகவே கிடைக்கிறது. குறிப்பாக அவசரசிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவை கிடைப்பதில்லை.
வெளி மாவட்டம் செல்லும் மக்கள்
எஸ்.புதுாரில் 30, புழுதிபட்டியில் 6 படுக்கைகள்மட்டுமே உள்ளது. பெரும்பாலும் வெளிநோயாளிக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவங்கள் இங்கே பார்க்கப்படும் நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஆபத்தான முறையில் வருபவர்களுக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அல்லது சிவகங்கைக்கு பரிந்துரை செய்து விடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பலரும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வராமல் நேரடியாக வெளி மாவட்ட மருத்துவமனைகளையே சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
டாக்டர், ஊழியர் பற்றாக்குறை
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்,செவிலியர் பற்றாக்குறையும் உள்ளதால் சில நேரங்களில் சாதாரண சிகிச்சைக்கு கூட வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கிடையில் எஸ்.புதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது.
இதற்காக கிராமத்தார்கள் தனியாக 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் அங்கு இதுவரை எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை.
விரிவாக்கம் இல்லை
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே உள்ள இடத்திலேயே 30 படுக்கையறை கொண்ட இரண்டு அடுக்கு கட்டடம் கட்டப்பட்டது. ஆனாலும் பல்வேறு வசதி இல்லாமல் சாதாரண நோய்களுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு செயல்பட்ட அலுவலகத்தை புழுதிபட்டிக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய தரச் சான்று பெற்ற மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டது. ஆனாலும் ஒன்றியம் முழுவதும் இருந்து வருபவர்களுக்கு எஸ்.புதுார் மட்டுமே மையப் பகுதியாக உள்ளது.
எனவே ஒன்றியத்தில் பெருகி வரும் மக்கள் தொகை, நோய்களின் பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கணக்கில் கொண்டு எஸ்.புதுாரில் 100 படுக்கைகள், அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை கொண்ட தனி மருத்துவமனை அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.