/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடப்பற்றாக்குறை நில அளவீடு நிறுத்தம்
/
இடப்பற்றாக்குறை நில அளவீடு நிறுத்தம்
ADDED : அக் 08, 2025 12:25 AM
பூவந்தி : பூவந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடம் போதுமானதாக இல்லாததால் நிலம் அளவீடு பணி நிறுத்தப்பட்டது.
பூவந்தியில் செப்டம்பர் 30ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் 182 பேருக்கு 27 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை அளவீடு செய்து தர வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடந்தது. பட்டா பெற்ற 182 பயனாளிகளில் சிலர் வெளியூர் சென்று விட்டனர். ஒருசிலர் உயிரிழந்துள்ளனர்.
பட்டா கேட்டு பல முறை போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடந்த போராட்டத்தின் விளைவாக பட்டா பெற்ற மக்களுக்கு அக்டோபர் 7ம் தேதிக்குள் இடம் அளவீடு செய்து தரப்படும் என தாசில்தார் ஆனந்தபூபாலன் தெரிவித்திருந்தார். நேற்று தாசில்தார் தலைமையில் நில அளவையர்கள் மூலம் வருவாய்த்துறையினர் ஐந்து ஏக்கர் 30 சென்ட் நிலத்தை அளவீடு செய்த போது பொதுப்பாதை, மின் கோபுர இடம் ஆகியவை போக மீதியுள்ள இடத்தில் தலா 1.80 சென்ட் நிலம் மட்டுமே வழங்க முடியும் என தெரியவந்தது. பயனாளிகள் பலரும் தலா இரண்டரை சென்ட் வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் உயிரிழந்தவர்கள், வெளியூர் சென்றவர்களின் உறவினர்கள் தங்களுக்கும் இடம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் சர்ச்சை எழுந்தது.
எனவே அளவீட்டு பணியை நிறுத்திய அதிகாரிகள் பிரச்னை குறித்து கலெக்டரிடம் முறையிட்ட பின் மீண்டும் அளவீடு செய்யப்படும் என தெரிவித்தனர்.