/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் 674 பேருக்கு லேப்டாப் வழங்கல்
/
காரைக்குடியில் 674 பேருக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : ஜன 07, 2026 05:46 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த, உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் 674 பேருக்கு மடிக்கணினியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும், உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 14 அரசுக் கல்லூரிகள், 5 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 19 கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 6 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
ஒரு மடிக்கணினி ரூ.21 ஆயிரத்து 650 வீதம், மொத்தம் ரூ. 13 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. முதற்கட்டமாக அழகப்பா அரசு கலைக் கல்லுாரியை சேர்ந்த 500 பேருக்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள் 174 பேர் என மொத்தம் 674 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பொற்கொடி தலைமையேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
திட்ட இயக்குனர் அரவிந்த், அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விசாலாட்சி, அழகப்பா கல்லுாரி முதல்வர் வசந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

