/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் வறண்டு கிடக்கும் கண்மாய்
/
இளையான்குடியில் வறண்டு கிடக்கும் கண்மாய்
ADDED : டிச 16, 2024 07:03 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உப்பாற்றில் செல்லும் மழை நீர் வீணாக வைகையில் கலப்பதை தடுத்து இளையான்குடியில் வறண்டு கிடக்கும் கண்மாய்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித் துறை அதிகாரிகளால் மானாமதுரை, இளையான்குடியில் விவசாயம் குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் நெல், கரும்பு,வாழை போன்ற விவசாயத்திற்கும், இளையான்குடியில் சாலைக்கிராமம், முனைவென்றி, சூராணம், உள்ளிட்ட பகுதிகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குண்டு மிளகாய் மற்றும் பருத்தி,நெல் விவசாயத்திற்கும் மானாமதுரை வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பன் கால்வாய்த் திட்டம் உருவாக்கப்பட்டது.
மானாமதுரை அருகே வைகையாற்றில் உபரியாக கலக்கும் நீரை திருப்ப உப்பாற்றில் கள்ளர்குளம் என்னுமிடத்தில் சுப்பன் கால்வாய் கட்டும் திட்டத்தின் மூலமாக அணை கட்டப்பட்டு கால்வாயும் வெட்டப்பட்டது.
ஆனால் இத்திட்டம் நிறைவேறாமல் கிடப்பில் உள்ளது. மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாவில் இத்திட்டத்தின் மூலம் செய்களத்துார் பெரிய கண்மாய், சின்னக் கண்மாய், மஞ்சிக்குளம், கல்குறிச்சி, அரகுழி, அரசனேந்தல், வடக்குச் சந்தனுார் உள்ளிட்ட 33 கண்மாய்கள் மூலம் 8ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உப்பாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வீணாக செய்களத்துார் அணைக்கட்டிலிருந்து வைகை ஆற்றில் கலந்து வருகிறது.
இதனை இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு திருப்பி விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கண்மாய் வறண்டு குண்டு மிளகாய் மற்றும் நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் ராமமுருகன் கூறியதாவது:
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று உப்பாற்றில் செல்லும் வெள்ளத்தை பார்வையிட்ட பிறகும் பார்த்திபனுார் மதகணையிலிருந்து இடது பிரதான கால்வாய் வழியாக இளையான்குடி பகுதிக்கு வறண்டு கிடக்கும் 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக வீணாக வைகையில் செல்லும் உப்பாற்றுத் தண்ணீரை பார்த்திபனுார் மதகணையின் இடது பிரதான கால்வாய் மூலம் திருப்பி வறண்டு கிடக்கும் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.