/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் வட்டாரத்தில் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு
/
திருப்புவனம் வட்டாரத்தில் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு
திருப்புவனம் வட்டாரத்தில் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு
திருப்புவனம் வட்டாரத்தில் கடும் வெயிலால் கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் இன்றி தவிப்பு
ADDED : மார் 22, 2025 05:04 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கடுமையான வெயில் காரணமாக கால்நடைகள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.
திருப்புவனம் வட்டாரத்தில் பெத்தானேந்தல்,மணல்மேடு, கீழடி, அகரம், கொந்தகை, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, எருமை மாடு, ஆடு உள்ளிட்டவைகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன.
மாவட்டத்திலேயே திருப்புவனம் பகுதியில் இருந்து தான் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்குஅதிகளவு பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர்கள் தீவனம் வாங்கி கால்நடைகளுக்கு போடுவதுடன் அவற்றை மேய்ச்சலுக்கு வயல்கள், கண்மாய்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
கண்மாயில் தண்ணீர் இருந்தால் கால்நடைகள் தாகம் தீர்க்கும், கண்மாயில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் கிணற்று பாசனம் மூலம் விவசாயம்செய்யும் விவசாயிகள் வாய்க்கால் வழியாக வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். அதில் கால்நடைகளை குடிக்க வைப்பது வழக்கம்.
கடும் வெயில் காரணமாக தண்ணீர் எளிதில் ஆவியாகி விடுவதால் கிணற்று பாசன விவசாயிகள் பலரும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
கண்மாய், குளம், குட்டை, பள்ளங்கள் என எதிலுமே தண்ணீர் இல்லாததால் கால்நடை மேய்ப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழை தரையை மட்டும் நனைத்ததுடன் சரி கண்மாய்களில் சேரவே இல்லை என கால்நடை மேய்ப்பவர்கள் புலம்புகின்றனர்.
கால்நடை மேய்ப்பவர்கள் கூறுகையில், ஒருசில மாடு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை, பத்து மாடு, ஐந்து மாடு, 100 ஆடு உள்ளிட்டவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தண்ணீர் இருக்கும் இடமாக பார்த்து நீண்ட தூரத்திற்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது, என்றனர்.
கிராமப்புறங்களில் காட்டுப்பகுதிகளில் உள்ள அடி குழாய்கள், ஆழ்குழாய்களை சரிசெய்ய வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.