/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மதுரை வியாபாரியை கடத்தி ஒன்றரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை
/
காரைக்குடியில் மதுரை வியாபாரியை கடத்தி ஒன்றரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை
காரைக்குடியில் மதுரை வியாபாரியை கடத்தி ஒன்றரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை
காரைக்குடியில் மதுரை வியாபாரியை கடத்தி ஒன்றரை கிலோ தங்கக்கட்டிகள் கொள்ளை
ADDED : ஆக 06, 2025 12:00 AM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுங்க இலாகா அதிகாரிகள் எனக்கூறி மதுரை நகை வியாபாரியை காரில் கடத்தி ரூ.1.30 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கக்கட்டிகளை பறித்து தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்தவர் விஜயராஜா 40. இவர் மதுரை நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நகை வியாபாரியாகவும் உள்ளார். காரைக்குடியில் உள்ள நகைக்கடைகளுக்கு ஆர்டரின் பெயரில் தங்கக்கட்டிகள் மற்றும் நகைகள் கொண்டு வருவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து விஜயராஜா ஒன்றரை கிலோ தங்கத்துடன் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். அங்கிருந்து நகை கடை ஒன்றுக்கு நடந்து சென்றவரை காரில் சென்ற நான்கு பேர் வழிமறித்தனர். தாங்கள் சுங்க இலாகா அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள் அவரை காரில் ஏற்றினர். பின் கானாடுகாத்தான் வரை சென்ற அவர்கள் ஒன்றரை கிலோ தங்கம் இருந்த பையை பறித்துக்கொண்டு விஜயராஜாவை அங்கேயே இறக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
கானாடுகாத்தானில் இருந்து ஆட்டோவில் காரைக்குடி வந்த விஜயராஜா நகைக்கடை வியாபாரிகளுடன் சேர்ந்து காரைக்குடி போலீசில் புகார் அளித்தார்.
வியாபாரிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பல் 2023 ல் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த நகைக்கடை ஏஜன்ட் ரவிச்சந்திரன் ரூ.2.50 கோடி மற்றும் ஒரு கிலோ தங்க நகைகளுடன் சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அவரிடம் காரில் சென்ற போலீஸ் உடை அணிந்த 4 பேர் பணம், நகைகளை பறித்துச் சென்றனர்.
2024 ல் காரைக்குடி சுந்தரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி சரவணன், 75 பவுன் நகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியுடன் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு பஸ்சில் வந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சரவணனை தாக்கி சிலர் தங்கம், வெள்ளியை பறித்து சென்றனர். இதுபோல தொடர்ச்சியாக நகை வியாபாரிகளை தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடிப்பது அரங்கேறி வருகிறது. இதில் ஈடுபடுவோரை கைது செய்து இதுபோன்ற வழிப்பறிகள் தொடராமல் இருக்க போலீசார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.