ADDED : செப் 18, 2025 05:22 AM

திருப்புவன: திருப்புவனம் வைகை ஆற்றில் நீர் வரத்து காரணமாக இந்தாண்டு மஹாளய அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் செய்ய போதிய இடவசதி இல்லாத நிலை உருவாகியுள்ளது.
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.வரும் 21ம் தேதி புரட்டாசி மஹாளய அமாவாசை தினம் என்பதாலும் ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் அதிகமான பக்தர்கள் வர வாய்ப்புண்டு. வைகை ஆற்றங்கரையில் இடப்பற்றாக்குறை காரணமாக அமாவாசை தினங்களில் வைகை ஆற்றினுள் ஓலை கொட்டகை அமைத்து திதி, தர்ப்பணம் வழங்குவது வழக்கம்.
வைகை ஆற்றினுள் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது ஆற்றினுள் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் முதியோர்கள், பெண்கள் இறங்கி நடந்து செல்லும் போது தடுமாறி நீரில் விழ வாய்ப்புண்டு. வைகை ஆற்றங்கரையிலும் போதிய இடவசதி இல்லாத நிலையில் எங்கு நடத்துவது என்ற குழப்பம் நிலவி வருகிறது.