மானாமதுரை – சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பார்ப்பு
மானாமதுரை – சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பார்ப்பு
UPDATED : அக் 25, 2026 06:56 PM
ADDED : அக் 25, 2026 06:54 PM
மானாமதுரை: மானாமதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் செல்வதற்காக மதுரையிலிருந்து இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரையிலிருந்து இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து சென்னைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்ற நிலையில் போதுமான ரயில்கள் இல்லாத காரணத்தினால் ஏராளமான தனியார் பஸ்களும் சென்று வருகின்றது. இந்நிலையில் மானாமதுரை வழியாக தினந்தோறும் இரவு நேரங்களில் ஏராளமான ரயில்கள் சென்னைக்கு சென்று வருகின்ற நிலையில் இங்கிருந்து காலை நேரத்தில் கிளம்பி பகல் நேரத்தில் சென்னை செல்வதற்கு ரயில்கள் இல்லாத சூழ்நிலையில் மானாமதுரையில் இருந்து பகல் நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை
மானாமதுரை வரை நீட்டிக்க வாய்ப்பில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை
மானாமதுரையிலிருந்து இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது, மதுரையில் இருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2: 15 மணிக்கு சென்னை சென்று சேர்கிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களை மதுரையில் நிறுத்த போதிய பிளாட்பார்ம்கள் இல்லை. சில ரயில்களை மானாமதுரை வரை நீட்டிக்கின்றனர். எனவே வைகை எக்ஸ்பிரஸ் ரயிலையும் தினமும் மானாமதுரையில் இருந்து தினமும் காலை 6:00 மணிக்கு புறப்பட்டால் சென்னைக்கு உரிய நேரத்திற்கு சென்று சேரும். சென்னையில் மதியம் 1:15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8:15 மணிக்கு மதுரை வந்து சேர்கிறது. இதை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றனர்.
