/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வஞ்சினிப்பட்டியில் மொகரம் பூக்குழி விழா
/
வஞ்சினிப்பட்டியில் மொகரம் பூக்குழி விழா
ADDED : ஜூலை 07, 2025 04:04 AM

ஹிந்து, முஸ்லிம்கள் : திருப்புத்துார், ஜூலை 7--
மொகரம் பண்டிகையை முன்னிட்டு திருப்புத்துார் அருகே வஞ்சினிபட்டியில் ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து பூக்குழி இறங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடினர்.
இங்கு, 17 ம் நுாற்றாண்டில் இருந்து வஞ்சினிபட்டி கிராமத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து மொகரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பத்து நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
முஸ்லிம்கள் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். கிராமத்தினருக்கும், ஹிந்துக்களுக்கும் அசைவ விருந்து நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் பாத்தியா ஓதினர். மல்லிகை பூக்கள், சர்க்கரை வைத்து வழிபட்டனர்.
பின் அங்குள்ள கூடாரத்தில் தொழுகை நடத்தி, அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கூடாரம் வாசலில் அமைக்கப்பட்ட பூக்குழியை மூன்று முறை சுற்றி வலம் வந்தனர். அதிகாலையில் கிராமத்தினர் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனர்.
அப்போது பூக்குழிக்குள் இருந்த நெருப்பை மண்வெட்டியால் அள்ளி பெண்களின் முந்தானைகளில் வழங்கினர்.
பெண்கள் குலவையிட்டவாறே வாங்கி நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டினர். பூக்குழி சாம்பலை அனைவரும் நெற்றியில் பூசினர்.