/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாருக்கு தாமதமாகும் நகராட்சி அந்தஸ்து: வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
/
திருப்புத்துாருக்கு தாமதமாகும் நகராட்சி அந்தஸ்து: வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
திருப்புத்துாருக்கு தாமதமாகும் நகராட்சி அந்தஸ்து: வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
திருப்புத்துாருக்கு தாமதமாகும் நகராட்சி அந்தஸ்து: வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
ADDED : நவ 11, 2025 11:58 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் நகரின் விஸ்தரிப்பு பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரிப்பும், அருகாமை கிராமங்களின் குடியிருப்புக்கள் நகருக்குள் வளர்வதாலும், விரிவான வளர்ச்சிப்பணிகளுக்கு திருப்புத்துார் நகரை நகராட்சியாக தரம் உயர்த்த மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
திருப்புத்துார் வரலாறு, புராணச் சிறப்பு மிக்க நகர். பிரிட்டிஷ் ஆட்சியிலேயே தாலுகா தலைநகராக இருந்தது. திருப்புத்துாருக்கு பின் பரிந்துரைக்கப்பட்ட பல பேரூராட்சிகள் நகராட்சி அந்தஸ்தை பெற்றும் இன்று வரை திருப்புத்துார் நகராட்சி அந்தஸ்தை பெறாமல் தேர்வுநிலை பேரூராட்சியாகவே உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி அந்தஸ்திற்காக கோப்புகள் அனுப்பப்பட்டும் இன்று வரை கிடப்பிலேயே உள்ளது.
இங்கு 14 ஆயிரம் வீடுகள், கடைகள் கொண்டு 18 வார்டுகளுடன் திருப்புத்துார் நகர் உள்ளது. நகராட்சியாவதற்கு தேவையான மக்கள் தொகையான 30 ஆயிரம் மற்றும் ரூ.6 கோடி வருவாய்க்கும் அதிகமாகவே திருப்புத்துார் பேரூராட்சி உள்ளது. ரூ 6 கோடிக்கும் அதிகமான வருவாய் உள்ள திருப்புத்துார் பேரூராட்சி முதல்நிலை நகராட்சிக்கான தகுதியில் உள்ளது.
மேலும் தற்போது பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள கிராம குடியிருப்புகளை நிர்வாக வசதிக்காக சேர்க்கப்பட்டதில் ஒரு ஊராட்சி முழுமையாகவும், மற்றொரு ஊராட்சி பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளதால் மக்கள் தொகையும் மற்றும் வருவாயும் மேலும் அதிகரிக்கும். நகரைச்சுற்றிலும் காட்டாம்பூர், ரணசிங்கபுரம், நெடுமறம், வாணியங்காடு கிராம ஊராட்சிகளின் குடியிருப்புக்கள் திருப்புத்துார் எல்லையை தொட்டு விட்டன.
குடியிருப்புக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விஸ்தரிப்பு பகுதிகளில் தெருவிளக்கு, சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளது. கழிவுநீர் வெளியேற்ற பாதாளசாக்கடைத் திட்டமோ, போதுமான உரக்கிடங்கு வசதியோ இல்லை. தினசரி மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், பூங்கா வசதிகளும் இல்லை. இதனால் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் பெற நகராட்சியாக தரம் உயர்த்த மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது.
திருப்புத்துார் பேரூராட்சியைச் சுற்றிலும் தேசிய நெடுஞ்சாலைகளின் புறவழிச்சாலை செல்வதால் நகரை சுற்றி ஒரு சுற்றுச்சாலை உருவாகியுள்ளது. மேலும் கூடுதல் சுற்றுச்சாலைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சாலைக்குள் உள்ள குடியிருப்புகளை திருப்புத்துார் நகராட்சி எல்லைக்குள் வருமாறு நகரை வறையுறுத்தால் விரிவான நகருக்காக மாஸ்டர் பிளான்' திட்டமிடலுக்கு பொருத்தமாக இருக்கும். அப்பகுதியினருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கும்.

