/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழநிக்கு காவடியுடன் நகரத்தார் பாதயாத்திரை; 425 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
/
பழநிக்கு காவடியுடன் நகரத்தார் பாதயாத்திரை; 425 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
பழநிக்கு காவடியுடன் நகரத்தார் பாதயாத்திரை; 425 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
பழநிக்கு காவடியுடன் நகரத்தார் பாதயாத்திரை; 425 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
ADDED : பிப் 05, 2025 10:07 PM
நெற்குப்பை; பழநி ஆண்டவருக்கு காவடி செலுத்த 14 வது தலைமுறையாக நகரத்தார் இன்று நெற்குப்பையிலிருந்து புறப்படுகின்றனர்.
புதுக்கோட்டை தேக்காட்டூர் முனைச்சந்தையில் வசித்தஇளநலமுடையான் குப்பாபிச்சான் செட்டி குமரப்பர் என்பவர் பழநியில் கீழ ஆவணி மூலவீதியில் அப்போது பூஜகராக இருந்த தெய்வநாயக தேசிகர் வீட்டில் தங்கி உப்பு வணிகம் செய்து வந்தார்.வணிகத்தில் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை பழநி ஆண்டவருக்கு மகமையாக எடுத்து வைத்தனர்.
மகமை நிதியில் தேசிகர் துணையுடன் அன்னதானம், பழநி முருகன் வழிபாடு செய்தனர். அப்போது நகரத்தார்களின் குருபீடமான கலாமடம் ஈசானிய சிவாச்சார்யாரின் அறிவுறுத்தலின்படி குப்பாபிச்சன் செட்டி குமரப்பன் கி.பி.1601 ல் குன்றக்குடியில் காவடி கட்டி பாதயாத்திரையை துவக்கினார்.
தைப்பூசத்தன்று பழநி சென்று தெய்வநாயக தேசிகர் -பார்வதி அம்மாள் மடத்தில் தங்கி 5 நாட்கள் மகேஸ்வர பூஜை, அன்னதானம் செய்து, தை மாத மக நட்சத்திரத்தன்று பழநிமலையில் காவடி செலுத்தினார். அவரைப் பின்பற்றி நகரத்தார்கள் பழநிக்கு கடந்த 424 ஆண்டுகளாக பாதயாத்திரையாக சென்று காவடி செலுத்தி வருகின்றனர்.
தேக்காட்டூர் முனைச்சந்தையிலிருந்து புலம் பெயர்ந்து தற்போது நெற்குப்பையில் இக்குடும்பத்தினர் வசிப்பதால், பாரம்பரியமாக நெற்குப்பையிலிருந்து காவடி எடுத்து செல்கின்றனர். நகரத்தார் ஊர்களான நெற்குப்பை,மேலச்சிவபுரி,வலையாபட்டி,குளிபிழை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வருபவர்கள் மேலவட்டகையைச் சேர்ந்தவர்கள் என்றும், இவரது சொந்த ஊர்களில் தை கார்த்திகையன்று காவடி கட்டி நெற்குப்பை பூசாரி ஐயா வழிநடத்த சமுத்திராப்பட்டியில் ஒன்று சேர்கின்றனர். அது போல கீழவட்டகை மற்றும் பிறவட்டகையைச் சேர்ந்த நகரத்தார்கள் தை பரணியன்று புறப்பட்டு காரைக்குடி அரண்மனை பொங்கல் அய்யா வழிநடத்தி குன்றக்குடி வருகின்றனர்.
பாதயாத்திரையாக செல்லும் அனைத்து நகரத்தார் காவடிகளும் தைப்பூசத்தன்று பழநி மலை அடிவாரத்தில் ஒன்றாக இணைந்து அன்னதான மடத்தில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் செய்கின்றனர். தை மக நட்சத்திரத்தில் சண்முக நதியில் நீராடி அன்னதான மடத்திலிருந்து புறப்பட்டு மலைக்கு சென்று பழநி ஆண்டவருக்கு 500க்கும் மேற்பட்ட காவடிகளை செலுத்துகின்றனர்.
குப்பாபிச்சன் செட்டி குமரப்பனால் எடுத்து வரும் காவடி கட்டளைக் காவடி' என்றழைக்கப்படுகிறது. தற்போது 424 வது ஆண்டுகளாக காவடி செலுத்தி வருகின்றனர். கொரோனா காலத்திலும் சிறப்பு அனுமதியுடன் பாதயாத்திரை சென்று காவடி செலுத்தியுள்ளனர். நகரத்தார் காவடிகளில் கட்டளைக்காவடிக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. பூசாரி சந்ததியினருக்கும் அன்னதான மடத்தின் முதல் மரியாதை இன்றும் வழங்கப்படுகிறது.
யாத்திரை துவங்கி 425 வது ஆண்டு என்பதால் நெற்குப்பை பழநி கோவில் வீட்டில் இன்று காலை சக்தி வேலாயுத சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனைக்கு பின் அன்னதானம் வழங்கப்படும்.மாலையில் சக்தி வேலாயுத சுவாமியுடன் குமரப்பரின் 14 வது தலைமுறையினர் கட்டளைக் காவடி உள்ளிட்ட நகரத்தார் காவடிகளுடன் யாத்திரை புறப்படுகின்றனர்.
பிப்.13 மாலை 5:00 மணிக்குள் பழநி ஆண்டவருக்கு காவடி செலுத்துகின்றனர். மூலவருக்கு பிப்.15ல் பஞ்சாமிர்தம் அபிேஷகம், பிப்.16ல் சந்தன அபிேஷகம் செய்து தரிசனம் செய்கின்றனர். பிப்.17 ல் மீண்டும் பாதயாத்திரையாக புறப்பட்டு சமுத்திராப்பட்டி வந்து சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். நெற்குப்பை காவடி பிப்.20ல் நெற்குப்பை வந்து சேரும்.