/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பார்க்கிங் சாலையான தேசிய நெடுஞ்சாலை
/
பார்க்கிங் சாலையான தேசிய நெடுஞ்சாலை
ADDED : டிச 05, 2025 06:04 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை பார்க்கிங் சாலையாக மாறியதால் தினந்தோறும் விபத்து நடக்கிறது
காரைக்குடி திண்டுக்கல் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. சிங்கம்புணரி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பல கடைக்காரர்களுக்கு சாதகமாக வடிகாலை வளைவாக அமைத்தும், பாதியில் கைவிட்டும் சென்றனர்.
சாலை முறையாக அகலப்படுத்தப்படாத நிலையில் இருபுறமும் சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டது. சர்வீஸ் சாலையை கடைக்காரர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் பொருட்களை குவித்து வைத்திருக்க பயன்படுத்துகின்றனர்.
நான்கு ரோடு சந்திப்பில் இருந்து அரணத்தங்குன்று வரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். இதனால் குறுகிய பாதையிலேயே வாகனங்கள் சென்று வர வேண்டி உள்ளது.
ரோட்டில் வாகனங்கள் நிற்கும்போது அதை கடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
இதுவரை இச்சாலையில் 5க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று கூட நான்கு ரோடு சந்திப்பு அருகே ஒரு பெண்ணின் கால் மீது கார் ஏறிச் சென்றுள்ளது.
போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள வாகனங்களை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இச்சாலையில் எந்த வாகனமும் நிறுத்தாத அளவிற்கு பாரபட்சமின்றி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

