ADDED : டிச 06, 2024 05:32 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளின்படி கூடுதல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
திருப்புத்தூர் ஒன்றியம் வழியாக மேலூர்--காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நீர்நிலைகள், வயல்கள் வழியாக பசுமைவழிச்சாலையாக செல்கிறது. அதில் மழை நீர் ஆற்றில் வடிய வழியில்லாமல் தேவரம்பூர் கிராமத்திற்குள் வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.
அது போல் பிராமணம்பட்டி பகுதியில் விவசாயப்பணி,கோயில் நடைமுறைகளுக்காக சுரங்கப்பாதை அமைக்க கோரியிருந்தனர். ஒத்தைப்பட்டி கிராமத்திற்கு புதிய சாலை அமைக்கவும் கோரியிருந்தனர்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் அடிப்படையில் அமைச்சர் பெரியகருப்பன் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம், ' தேவரம்பூரில் உபரி நீர் மாற்று வழியில் பாலத்திற்கு மறுபுறம்பிரதான வாய்க்கால்கள் அமைக்கவும், பிராமணம்பட்டி பகுதியில் இருபுறங்களிலும் அகலமான சாலை ஏற்படுத்தவும், நெடுஞ்சாலையில் சந்திப்புகளை ஏற்படுத்தவும்' அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தானிப்பட்டி - ஒத்தப்பட்டிக்கு வில்லூர் கண்மாய் பகுதியில் ரூ 41 லட்சத்தில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.