/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமமே காலி கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியேறினர் மக்கள்
/
சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமமே காலி கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியேறினர் மக்கள்
சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமமே காலி கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியேறினர் மக்கள்
சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமமே காலி கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாததால் வெளியேறினர் மக்கள்
ADDED : ஆக 06, 2025 12:19 AM

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலை, அடிப்படை வசதிகள் இல்லாததாது போன்றவற்றால் மக்கள் கிராமத்தை காலி செய்து வெளியூர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சியின் கீழ் நாட்டாகுடி, வேலாங்குளம், இலந்தங்குடி உட்பட 5 கிராமங்கள் உள்ளன. இதில் நாட்டாகுடி கிராமத்தில் 5 தலைமுறைகளாக 150 குடும்பத்தினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.
உப்பாற்றில் ஓடும் வெள்ள நீர், நாட்டாகுடி கண்மாயை நிரப்பி செல்வதன் மூலம், 200 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது. 20 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட வறட்சி காரணமாக அக்கிராம மக்கள் படிப்படியாக மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு குடியேறினர்.
50 குடும்பங்கள் தொடர்ந்து வசித்தனர். ஆனால் போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
குற்றச்சம்பவங்கள் இந்த நிலையில் கிராமத்தில் குற்றசம்பவங்களும் அதிகரிக்க துவங்கின. ஒரு வயது குழந்தையின் கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்து உப்பாற்றில் புதைத்தார். கிராம முக்கியஸ்தர் கணேசன் என்பவரை, ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
ஜூலை 20 அன்று மதியம் 1:00 மணிக்கு டூவீலரில் வந்த 3 பேர் வீட்டிற்கு முன் அமர்ந்திருந்த விவசாய கூலி தொழிலாளி சோணைமுத்து 62,வை கொலை செய்து, தலையை அறுத்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாயில் வீசி விட்டு சென்றனர்.
ஏற்கனவே பல குடும்பங்கள் வெளியேறிய நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து இருந்த 10 குடும்பமும் கால்நடைகளுடன் ஊரை காலி செய்துவிட்டு பிற நகரங்களுக்கு சென்றுவிட்டனர். 'பெற்ற தாய் போன்று தான் சொந்த ஊரும்'
நாட்டாகுடி தங்கராஜ் 55, கூறியதாவது: 5 தலைமுறைகளாக இக்கிராமத்தில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் கிராமத்திற்கு குடிநீர், ரோடு, தெருவிளக்கு, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித வசதிகளையும் செய்து தரவில்லை.
சோணைமுத்து கொலைக்குப்பின் எல்லோரும் வெளியேறிவிட்டனர். 'பெற்ற தாயை போன்றது சொந்த ஊர்' என்பதால், கடைசி காலத்தில் நான் மட்டுமே என் தாயை (கிராமத்தை) பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து தனியாக வசிக்கிறேன், என்றார்.
விசாரணைக்கு உத்தரவு சிவகங்கை கலெக்டர் கே.பொற்கொடி கூறியதாவது: நாட்டாகுடி கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் குடிநீர் மேல்நிலை தொட்டி மூலம் தண்ணீர் வசதி கிடைக்கிறது.
செயல்பாடின்றி இருந்த 5 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் பழுது நீக்கி செயல்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
45 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. தெருவிளக்குகளும் சரியான நிலையில் உள்ளது.
தொடர் கொலைகளால் ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க எஸ்.பி., சிவபிரசாத்திடம் தெரிவித்துள்ளேன்.
நாட்டாகுடி மக்கள் அச்சமின்றி கிராமத்தில் மீண்டும் குடியேறலாம், என்றார்.
சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து ஆளுங்கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் நாட்டாகுடி கிராம அவலத்தையும் கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.