'நீட்' தேர்வு விண்ணப்ப கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வந்தது
'நீட்' தேர்வு விண்ணப்ப கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வந்தது
ADDED : ஜூலை 30, 2026 11:00 PM
சிவகங்கை: 'நீட்' நுழைவு தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை காரணமாக மாணவர்களிடம் வசூலித்த விண்ணப்ப கட்டணம் அவரவர் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 'நீட்' நுழைவு தேர்வு நடத்தும்.
இந்தாண்டு மே 3 ல் நடத்தப்பட்டது. வடமாநிலங்களில் இதன் வினாத்தாள் கசிந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அத்தேர்வினை ரத்து செய்து, மீண்டும் ஜூன் 21ல் மறுதேர்வு நடத்தினர்.
பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டன. 'நீட்' தேர்வுக்கான விண்ணப்பத்தோடு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம் ரூ.1,000, பிற மாணவர்களிடம் ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்த பிரச்னையிலும், இத்தேர்வுக்கு எதிராகவும் டில்லி உட்பட நாடு முழுவதும் மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமையால் , ஜூன் 21ல் 'நீட்' மறு தேர்வு எழுதிய, எழுத தவறிய அனைத்து மாணவர்களின் வங்கி கணக்கிற்கும் விண்ணப்ப கட்டணம் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
