/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொதிக்கும் விவசாயிகள்: 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' அரசே முட்டுக்கட்டை: 5 ஆண்டாக கண்டுகொள்ளாத அ.தி.மு.க., எம்.பி.,
/
கொதிக்கும் விவசாயிகள்: 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' அரசே முட்டுக்கட்டை: 5 ஆண்டாக கண்டுகொள்ளாத அ.தி.மு.க., எம்.பி.,
கொதிக்கும் விவசாயிகள்: 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' அரசே முட்டுக்கட்டை: 5 ஆண்டாக கண்டுகொள்ளாத அ.தி.மு.க., எம்.பி.,
கொதிக்கும் விவசாயிகள்: 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' அரசே முட்டுக்கட்டை: 5 ஆண்டாக கண்டுகொள்ளாத அ.தி.மு.க., எம்.பி.,
UPDATED : ஜன 02, 2019 08:54 AM
ADDED : ஜன 02, 2019 01:46 AM

சிவகங்கை:சிவகங்கை 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' தமிழக அரசே முட்டுக்கட்டையாக உள்ளது. ஐந்து ஆண்டுகளாக செந்தில்நாதன் எம்.பி.,யும் கண்டுகொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில் மாநிலத்திற்கு ஒரு 'ஸ்பைசஸ் பார்க்' துவங்கப்பட்டது. தமிழகத்தில் மிளகாய், மஞ்சள் போன்ற வாசனை பொருட்களுக்கான 'ஸ்பைசஸ் பார்க்' அமைக்க 2008 ல் சிவகங்கையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 73 ஏக்கர் நிலத்தை 'ஸ்பைசஸ் போர்டிடம்' மாநில அரசு வழங்கியது. 23 ஏக்கரில் 28 கோடி ரூபாயில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கோடவுன்கள், சீதோஷ்ண நிலை கட்டுப்பாட்டு அறை, சுத்தம் செய்து தரம் பிரிக்கும் இயந்திரங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.
மேலும் நிறுவனங்கள் கோடவுன்கள் அமைக்க 50 ஏக்கர் தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த பூங்காவை 2013 ல் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார். இந்த பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 'ஸ்பைசஸ் பார்க்கிற்கு' மாநில நகரமைப்பு இயக்குனரகம் அங்கீகாரம் இல்லாததால், நிறுவனங்கள் கோடவுன்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 'ஸ்பைசஸ்' போர்டு சார்பில் அங்கீகாரம் கேட்டு 2016 ஜனவரியில் மாநில நகரமைப்பு இயக்குனரகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. மத்திய அரசு நிறுவனம் என்பதால் அங்கீகாரம் தர தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.
விவசாயிகள் வலியுறுத்தலை அடுத்து, 2016 ஆகஸ்டில் ஆறு பேர் அடங்கிய அ.தி.மு.க., எம்.பி.,க்கள் குழு 'பார்க்கை' பார்வையிட்டது. மேலும் விரைவில் அங்கீகாரம் பெற்று தருவதாகவும் உறுதியளித்தது. அதன்பின் பல முறை கோப்புகள் அனுப்பியும், மாநில அரசு அங்கீகாரம் தர மறுத்தது. இதனால் 28 கோடி ரூபாயிலான கட்டடங்கள், இயந்திரங்கள் வீணாகி வருகின்றன.
விவசாயிகள் கூறியதாவது: மாநில நகரமைப்பு இயக்குனரகம் தான் அனுமதி தரவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு தான் ஆட்சியில் உள்ளது.
அ.தி.மு.க., எம்.பி.,யான செந்தில்நாதன் நினைத்திருந்தால் அனுமதி பெற்று தந்திருக்கலாம். அவர் ஐந்து ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. ஒருமுறை பெயருக்கு எம்.பி.,க்கள் குழுவோடு வந்து சென்றார், என்றார்.