/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்தூரில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; ரூ 500 கோடியில் குடிநீர் குழாய் மாற்றம்
/
திருப்புத்தூரில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; ரூ 500 கோடியில் குடிநீர் குழாய் மாற்றம்
திருப்புத்தூரில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; ரூ 500 கோடியில் குடிநீர் குழாய் மாற்றம்
திருப்புத்தூரில் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; ரூ 500 கோடியில் குடிநீர் குழாய் மாற்றம்
ADDED : ஜன 28, 2024 05:19 AM
திருப்புத்துார், : திருப்புத்துாரில் குடிநீர் திட்ட குழாய் சேதத்தால் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. பழைய குழாய்களை இரும்பு குழாய்களாக மாற்ற ரூ. 500 கோடியில் பணி நடப்பதாக குடிநீர் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.
திருப்புத்துாரில் காவிரிக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. இத்திட்டம் துவங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் குழாய்கள் பலவீனமாகி பல இடங்களில் விரிசலடைந்து தண்ணீர் வெளியேறுவது தொடர்கதையாகி விட்டது.
போதிய அளவில் நிதி ஒதுக்கப்படாததும், பணியாளர் பற்றாக்குறையாலும் பராமரிப்பு பணிகளும் விரைவாக நடப்பதில்லை.
பொங்கலுக்கு முன்பாக திருப்புத்துார் தென்மாப்பட்டு பகுதியில் குழாய் சேதமடைந்து குடிநீர் வெளியேறியது. பொங்கல் வரை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பராமரிப்புப் பணிக்காக விநியோகம் நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிநீர் விநியோகம் துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று வரை துவக்கப்படவில்லை. கடந்த பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
பேரூராட்சி தரப்பில் கூறுகையில், தற்போது தரை மட்டத் தொட்டிக்கு குறைந்த அளவில் குடிநீர் சப்ளை ஆகிறது. இதனால் முழுமையான அளவில் குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு நீரேற்ற முடியவில்லை. விரைவில் குடிநீர் சப்ளை சீராகிவிடும் பட்சத்தில் உடனடியாக குடிநீர் விநியோகம் துவங்கப்படும்' என்றனர்.
குடிநீர் வாரிய பொறியாளர் தினேஷ் கூறுகையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் துவங்கி காளையார் கோயில் வரை ரூ.500 கோடி மதிப்பில் முக்கிய குழாய்கள் இரும்புக்குழாய்களாக மாற்றப்பட்டு வருகிறது. 90 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் தற்போது 40 கி.மீ வரை மாற்றப்பட்டுள்ளது. பிப்.மாதத்திற்குள் பணி நிறைவடைந்து விடும். அதன் பின்னர் குழாய் சேதமடைந்து குடிநீர் வெளியேறாது.
குடிநீர் விநியோகம் தடைபடுவது இருக்காது. பொங்கல் நேரத்தில் சேதமடைந்த குழாய்கள் பழுது நீக்கி சில நாட்களுக்கு முன்பாகவே குடிநீர் சப்ளை சீராகி விட்டது. தரை மட்டத் தொட்டிக்கு நீர் வருவதில் பிரச்னை என்றால் தீர்க்கப்படும்' என்றார்.