/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளிக்கு ரேஷனில் கூடுதல் பொருட்களுக்கு‛ 'நோ'
/
தீபாவளிக்கு ரேஷனில் கூடுதல் பொருட்களுக்கு‛ 'நோ'
ADDED : அக் 10, 2024 05:31 AM
திருப்புவன : தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இந்தாண்டு தீபாவளியை யொட்டி கூடுதல் பொருட்கள் வழங்கப்படுவது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வரும் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று வீடுகளில் அதிரசம், முருக்கு, உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது வழக்கம். பொதுவாக தீபாவளி, பொங்கலை விமரிசையாக கொண்டாடுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு தலை தீபாவளி என்பதால் சிறப்பு கவனிப்பும் இருக்கும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் கூடுதலாக எண்ணெய், சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்டவை வழங்குவது வழக்கம்.
இந்தாண்டு கூடுதலாக வழங்காததுடன் வழக்கமாக வழங்கப்படும் பச்சரிசியையும் நிறுத்தி விட்டனர் என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் 58 முழு நேர கடைகள், 21 பகுதிநேர கடைகள் மூலமாக 33 ஆயிரத்து 82 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் 12 முதல் 35 கிலோ வரை புழுங்கலரிசி, பச்சரிசி வழங்கப்படுகிறது. திருப்புவனம் தாலுகாவில் ஒரு மாதத்திற்கு 573 டன் அரிசி வழங்கப்படுகிறது.
இதில் 40 சதவிகிதம் பச்சரிசியாகும், விசேஷ நாட்களில் கூடுதலாக பச்சரிசி வழங்கப்படும், இந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பச்சரிசி கூட வரவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் புலம்புகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவிற்கு 435 டன் சர்க்கரையும், 101 டன் கோதுமையும், 27 டன் துவரம் பருப்பும் ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது. இந்த மாதம் கோதுமை கூடுதலாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தாலும் பல கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமையே வரவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் பல ரேஷன் கடைகளில் பச்சரிசி, கோதுமை கேட்டால் இல்லை என்றே ஊழியர்கள் திருப்பியனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் வட்டாரத்தில் பச்சரிசி விநியோகத்தை முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.