/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜோதி ரக நெல் கொள்முதல் இல்லை நுகர்பொருள் கழக அதிகாரிகள் கைவிரிப்பு
/
ஜோதி ரக நெல் கொள்முதல் இல்லை நுகர்பொருள் கழக அதிகாரிகள் கைவிரிப்பு
ஜோதி ரக நெல் கொள்முதல் இல்லை நுகர்பொருள் கழக அதிகாரிகள் கைவிரிப்பு
ஜோதி ரக நெல் கொள்முதல் இல்லை நுகர்பொருள் கழக அதிகாரிகள் கைவிரிப்பு
ADDED : நவ 22, 2025 02:45 AM
இளையான்குடி: சிவகங்கை மாவட்டத்தில் ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைக்கிராமம், முனைவென்றி சூராணம் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு தமிழக பகுதிகளிலும் ஜோதி ரக நெல் பயிரிடப்படுகிறது. இந்த நெல் பயிரிட 2022ம் ஆண்டு வரை வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டு வந்தது.
3 வருடங்களாக இந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாததால் கேரளாவில் இந்த அரிசிக்கு வரவேற்பு இருப்பதால் கேரளாவில் இருந்து வரும் தனியார் வியாபாரிகள் ஜோதி ரக நெல்லை வாங்கி செல்கின்றனர்.
இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராம விவசாயி தமிழரசன் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஜோதி ரக நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது இப்பகுதியில் 66 கிலோ கொண்ட ஒரு நெல் மூடையை ரூ.1200க்கு வாங்கி கேரளாவில் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதால் அம் மாநில அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் அவருக்கு அளித்த பதிலில் ஜோதி ரக நெல் சிவப்பு நிற மோட்டா ரக அரிசியாகும். இதனை அரவையில் உற்பத்தி செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியாத காரணத்தினாலும், இந்திய உணவுக் கழகத்திலிருந்து மானியம் பெற இயலாமல் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படுவது அறிந்து 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்வதில்லை. மேலும் கேரளா மாநில அரசுடன் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் பதில் தெரிவித்துள்ளனர்.

