/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எட்டு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
/
எட்டு ஆண்டுகளாக அகற்றப்படாத ஆக்கிரமிப்பு
ADDED : டிச 19, 2024 04:54 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ரோடு சுருங்கி வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன, இக்கிராம மக்கள் தங்களது தேவைக்கு திருப்புவனம் வந்து செல்கின்றனர். திருப்புவனம் நகர்பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களை கவர பலரும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இது தவிர சிலர் பூ, பழம், காய்கறி விற்பனை செய்யும் கடைகளை வைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர்.
ஏழு மீட்டர் அகலமுள்ள தேசிய நெடுஞ்சாலை நகர்பகுதியில் குறைந்த பட்சம் ஐந்தரை மீட்டர் இருந்தால் மட்டுமே எதிர் எதிரே வாகனங்கள் வரும் போது விலகி வழிவிட முடியும், ஆனால் மூன்றரை மீட்டர் மட்டுமே உள்ளதால் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது விலக முடிவதில்லை. தீபாவளிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவிடப்பட்டு குறியீடு செய்யப்பட்டன. தீபாவளி முடிந்த உடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை அகற்றப்படவில்லை. பொருட்கள் வாங்க வருபவர்கள் சாலையை ஒட்டி டூவீலரை நிறுத்தி ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். நகர்ப்புறங்களில் வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக சென்று வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.
திருப்புவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. அதன்பின் அகற்றப்படவே இல்லை. இதனால் பலரும் நிரந்தரமாக ரோட்டை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பியுள்ளனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளிடையே ஒருங்கிணைப்பும் இல்லாததால் தாமதம் ஆகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.