/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் அதிகாரிகள்
/
ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் அதிகாரிகள்
ADDED : ஏப் 02, 2025 06:37 AM
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்குவதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்புவனம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலரும் பொது நடைபாதை இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர்.
திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு அகற்றப்படவே இல்லை.
அடுத்தடுத்து வீடுகள் கட்டுபவர்கள் பலரும் அச்சமின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். தெருக்களில் அவசரத்திற்கு ஆட்டோ போக முடியவில்லை.
ஆக்கிரமிப்பு குறித்து புகார் கொடுத்தாலும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. புகார் கொடுத்தவரையே தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சமீப காலமாக பலரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
செல்லப்பனேந்தலில் மணிகண்டன் என்பவர் தெரு ஆக்கிரமிப்பு குறித்து மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த பின் ஆறு மாத கால போராட்டத்திற்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
லாடனேந்தலில் 50 வருடத்திற்கு மேலான ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவிற்கு பின் கடந்த ஒரு வருட காலமாக அகற்றப்பட்டு வருகின்றன.
வில்லியேரந்தல் மகேந்திரன் கூறுகையில் : கிராமங்களில் தெருக்களில் நடந்து செல்ல கூட பாதை இல்லை. அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை கட்டிலில் வைத்து துாக்கி வர வேண்டியுள்ளது.
ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை தான் அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் திருப்புவனம் தாலுகாவில் வருவாய்த்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.