/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு'
/
'கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு'
ADDED : ஜூன் 09, 2025 02:06 AM
காரைக்குடி: ''தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., விற்கு மாற்றாக எதிர்கட்சிகள் கூட்டணி உருவாகவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்து கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார். தற்போது அ.தி.மு.க., மட்டுமே பா.ஜ., கூட்டணியில் உள்ளது. மற்ற கட்சிகள் இன்னமும் உடன்படவில்லை. எனவே தி.மு.க.,வின்மதசார்பற்ற அணி தான் வலுவாக உள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணியில் கூடுதல் சீட் கேட்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையின் முடிவின்படி அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறோம்.
எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை தே.மு.தி.க., தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு ராஜ்யசபா சீட் குறித்து அ.தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதற்காக தி.மு.க., கூட்டணிக்கு தான் தே.மு.தி.க., வரும் என கருத முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் எங்கள் நிலைப்பாடு. போக்குவரத்துக் கழகங்கள் பெயரில் தமிழ்நாடு என்பதை எடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை.பா.ம.க.,வில் நடப்பது குடும்ப, உட்கட்சி விவகாரம். இதில் மற்றவர்கள் தலையிடுவது கவலையளிக்கிறது.
வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பஹல்காம் சம்பவத்தில் ஆப்பரேஷன் சிந்துார் தாக்குதல் குறித்து எல்லா கட்சியினரும் பேசுவார்கள். மத்திய அரசு அதற்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவிற்கு என தனியாக தேசிய மொழி இல்லை. இருப்பினும் ஒற்றுமை, ஒருமைபாட்டுடன் இருக்கிறோம். இதற்கு நம் அரசியலமைப்பு சட்டமே காரணம். பா.ஜ., அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்பட வேண்டும். மணிப்பூரில் நடக்கும் வன்முறை, அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு பா.ஜ., தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.