/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தொடர் மழையால் பாதிப்பு 35 வீடுகளுக்கு மேல் சேதம்
/
சிவகங்கையில் தொடர் மழையால் பாதிப்பு 35 வீடுகளுக்கு மேல் சேதம்
சிவகங்கையில் தொடர் மழையால் பாதிப்பு 35 வீடுகளுக்கு மேல் சேதம்
சிவகங்கையில் தொடர் மழையால் பாதிப்பு 35 வீடுகளுக்கு மேல் சேதம்
ADDED : டிச 14, 2024 05:37 AM

சிவகங்கை : மாவட்ட அளவில் நேற்று பலத்த மழை பெய்ததால் பகுதி, முழுவதுமாக 35 வீடுகளுக்கு மேல் சேதமாகின.
உப்பாற்றிற்கு செல்லும் கால்வாய் சரியாக துார்வாராமல் விட்டதால் பெரியகோட்டை கிராமத்தில் வீடு, வயல்களுக்குள் மழை நீர் புகுந்தது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேலடுக்கு சுழற்சி மழை, அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை, தற்போது மிக கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் வைகை ஆறு உட்பட சில ஆறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாசன வசதி பெறும் கண்மாய்களில் அதிகளவில் தண்ணீர் உள்ளதால், ஒரு போக சாகுபடி செய்யும் நோக்கில் மாவட்ட அளவில் 1.50 லட்சம் ஏக்கர் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
திருப்புவனத்தில் 106.08 மி.மீ., மழை
மாவட்ட அளவில் டிச., 11 ம் தேதி இரவில் இருந்து தொடர்ந்து அனைத்து பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திருப்புவனத்தில் 106.80 மி.மீ., மழை பெய்துள்ளது. திருப்புத்துாரில் - 96.40, சிங்கம்புணரி - 84.60, காரைக்குடி -80, காளையார்கோவில் 74.40, மானாமதுரை- 74, சிவகங்கை - 56, தேவகோட்டை - 52.60 , இளையான்குடி - 42 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 74.09 மி.மீ.,மழை பெய்துள்ளது.
மழைக்கு 35 வீடுகளுக்கு மேல் சேதம்
மழைக்கு பகுதி, முழுவதுமாக ஓடு, கான்கிரீட், மண்சுவர் உள்ள வீடுகள் என 35 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பெரியகோட்டை வழியாக உப்பாறு ஆற்றிற்கு செல்லும் கால்வாய் சரியாக துார் வாரவில்லை.
இதனால், நேற்று பெய்த மிக கனமழைக்கு உப்பாறு ஆற்றிற்கு செல்ல வேண்டிய மழை நீர், பெரியகோட்டை கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் வீடுகள், நெல் வயல்களில் மழை நீர் தேங்கி இக்கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
பெரியகோட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைக்கு கலெக்டரிடம் பரிந்துரை செய்வதாக கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.
அதே போன்று திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியம், மேலப்பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் எதிரே மணிமுத்தாறு ஆற்றிற்கு செல்லும் கால்வாய் துார்வாராமல் புதர்மண்டி கிடப்பதால், மழை நீர் ஆற்றிற்கு செல்லாமல் தேங்கி அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பட்டமங்கலம் கிராம மக்கள் வீடுகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த சிரமம் அடைந்தனர்.

