/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் வட்டாரத்தில் நெல் சாகுபடி குறைந்தது; நீர்நிலை, வரத்து கால்வாய் பராமரிக்கப்படுமா
/
திருப்புத்துார் வட்டாரத்தில் நெல் சாகுபடி குறைந்தது; நீர்நிலை, வரத்து கால்வாய் பராமரிக்கப்படுமா
திருப்புத்துார் வட்டாரத்தில் நெல் சாகுபடி குறைந்தது; நீர்நிலை, வரத்து கால்வாய் பராமரிக்கப்படுமா
திருப்புத்துார் வட்டாரத்தில் நெல் சாகுபடி குறைந்தது; நீர்நிலை, வரத்து கால்வாய் பராமரிக்கப்படுமா
ADDED : ஆக 06, 2025 08:29 AM

திருப்புத்துார் வட்டாரத் தில் பாலாறு, மணிமுத்தாறு,விருசுழியாறு பாய்கிறது. முன்பு மழை பொய்த்தாலும், ஆறுகளில் நீர்வரத்து இருந்தது. இதனால் கண்மாய்கள் பெருகியும், நிலத்தடிநீர் உயர்ந்து கிணற்று பாசனமும் பரவலாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்பகுதியில் பரவலாக தென்னை,மாந்தோப்புகள் அதிகமாக இருந்தன. நெல்சாகுபடியும் 15 ஆயிரம் ஏக்கர் அளவில் நடந்தது. புன்செய் கடலை,துவரை பயிர்களும் அதிகமாக இருந்தன.
வறட்சியால் மாறியது 1975 வறட்சிக்குப் பின் இது எல்லாம் மாறிவிட்டது. தோட்டபயிர் நெல்சாகுபடி,காய்கறி 60 சதவீதம் குறைந்து விட்டது. பாசனத்திற்காக அரசு பல கோடி மதிப்பில் பல திட்டங்கள் திருப்புத்துார் பகுதியில் நிறைவேற்றியும் பழைய பரப்பளவில் சாகுபடி நடைபெறவில்லை. திட்டத்தினால் பாசன நீர் அதிகரிக்கவில்லை. இதனால் குறைந்து விட்ட பாசன நீரே விவசாயம் குறைந்து போனதற்கான பிரதான காரணமாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
ஏமாற்றும் மழை, ஆறு, பெரியாறு கால்வாய் திருப்புத்துாரில் மழை சராசரியை விட அதிகமாக பெய்வதாக புள்ளி விபரங்கள் கூறினாலும் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை. காரணம் பருவம் தப்பி பெய்வதே. வழக்கமாக ஜூன்,ஜூலைகளில் 100 மி.மீ., அளவில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முற்றிலுமாக பெய்யவில்லை. ஆக.ல் தான் துவங்கியுள்ளது. இதனால் ஆடி பட்டத்திற்கு நெல் விதைக்கப்படவில்லை.
அடுத்து ஆற்றில் நீர்வரத்து. சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு முறை பாலாற்றில் நீர் வரத்து இருக்கும். தற்போது 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. காரணம் பாலாற்றின் மூலதாரமான நத்தம் கரந்தமலை பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு, மழை பொழிவு வெகுவாக குறைந்து விட்டதால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து விட்டது.
அப்படியே வந்தாலும் ஆற்றின் மேற்புறம் பல தடுப்பு அணைகள் கட்டப்பட்டு கண்மாய்கள் நிரம்பிய பின்னரே திருப்புத்துார் பகுதிக்கு நீர்வரத்து ஏற்படும். அருகாமையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு,விருசுழியாற்றில் ஓரளவு நீர் வரத்து தொடர்ந்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப நீர் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்படவில்லை.
வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லை கடந்த 1994ல் பெரியாறு மேம்பாடுத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 22 கோடியில் விஸ்தரிப்புக் கால்வாய் கட்டப்பட்டு சில ஆண்டுகள் நீர்வரத்து இருந்தது. அணையில் நீர் தேக்கும் உயரம் 132 ஆக முதலில் குறைக்கப்பட்டதால் முற்றிலுமாக நீர்வரத்து நின்றது. இதனால் வரத்துக்கால்வாய்கள் பராமரிப்பின்றி பொதுப்பணித்துறையினர் கைவிட்டனர். இதனால் கால்வாய் சிதிலமடைந்து காணாமல் தரைமட்டமாகி விட்டன. பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க அனுமதித்தும் கால்வாய் பராமரிப்பின்றி நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது.
கிடப்பில் காவிரி- குண்டாறு திட்டம் இந்நிலையில் புதிய வாய்ப்பாக, காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் திருப்புத்துார் பகுதி முதலில் சேர்க்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் மறுபரீசீலனையில் திருப்புத்தூர் வட்டாரம் புறக்கணிக்கப்பட்டது.இருப்பினும் கிளைக்கால்வாய் மூலம் திருப்புத்தூர் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டது. இத்திட்டத்திற்காக 12 ஆண்டுகளுக்கு முன் சர்வே செய்யப்பட்டு 150 மீ அகலத்தில் அளவீடு கற்கள் நடப்பட்டன. பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், தற்போது அக்கற்கள் அகற்றப்பட்டு ஆக்கிரமிப்புக்குள்ளாகியும், பல இடங்களில் கட்டடங்களும் வந்து விட்டன. இதனால் திட்டத்தின் மதிப்பீடு அதிகரிப்பதுடன் மீண்டும் மறு சர்வே செய்யும் நிலைக்கு பொ.ப.துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
வரத்துக்கால்வாய் கை கொடுக்கும் பொதுப்பணித்துறை,வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், சரிந்து வரும் சாகுபடி பரப்பை அதிகரிக்க முதன்மையான வழி, இருக்கும் நீர்நிலைகளை பராமரிப்பதே. நீண்ட காலமாக பல கண்மாய்கள் பராமரிக்கப்படவில்லை. கண்மாய்களை தூர்வாருவதுடன், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும். முக்கியமாக மடை மற்றும் கலுங்குகளை புனரமைக்க வேண்டும். அந்தந்த பகுதியில் பெய்யும் மழை நீரை முழுமையாக கண்மாயில் சேமிக்க வேண்டும்.' என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், கண்மாய்களில் மரங்கள் நடவு செய்த பின்னரே பராமரிப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. எனவே அனைத்து மரங்களையும் கண்மாய்களிலிருந்து அகற்றுவதுடன், மீண்டும் மரக்கன்றுகள் நடவு செய்யவும் தடை விதிக்க வேண்டும். அதன் பின்னரே பராமரிப்பு பணிகளை துவக்க வேண்டும். மன்னர் காலத்தில் போன்று நீர் சேமிப்பிற்கு மட்டுமே கண்மாய் பயன்படுத்த வேண்டும்.' என்றனர்.