/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மழையால் திருப்புவனத்தில் நெல் நாற்று நடவு பணிகள் மும்முரம்
/
தொடர் மழையால் திருப்புவனத்தில் நெல் நாற்று நடவு பணிகள் மும்முரம்
தொடர் மழையால் திருப்புவனத்தில் நெல் நாற்று நடவு பணிகள் மும்முரம்
தொடர் மழையால் திருப்புவனத்தில் நெல் நாற்று நடவு பணிகள் மும்முரம்
ADDED : நவ 04, 2024 07:09 AM

திருப்புவனம் ; திருப்புவனம் வட்டாரத்தில் மழை காரணமாக விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பி உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ஆகஸ்ட் மாதமே பணிகளை தொடங்கும் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்ததால் நடவு பணிகளும் தாமதமாக தொடங்கியுள்ளன.
திருப்புவனம் வட்டாரத்தில் ஒரு போகத்திற்கு பத்தாயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும், கோ, கோ 51, என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., ரகம் உள்ளிட்ட 130 நாள் பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் பெரும்பாலும் நாற்றங்கால் அமைத்து அதன்பின் அதனை பறித்து வயல்களில் நடவு செய்வது வழக்கம்.
திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தற்போது நேரடி விதைப்பு முறையில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. ஆனாலும் நாற்றங்கால் மூலம் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இந்நடவு முறையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் ஏக்கருக்கு 35 முதல் 40 மூடைகள் வரை நெல் அறுவடை ஆகும்.
நாற்றங்கால் அமைக்காத விவசாயிகள் கிணற்று பாசன விவசாயிகளிடம் இருந்து நெல் நாற்றுகள் வாங்கி நடவு செய்து வருகின்றனர்.