ADDED : ஆக 18, 2026 02:31 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே பெயின்டர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடுகின்றனர்.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் புதுாரைச் சேர்ந்த பெயின்டர் கணேசன் 35. இவர் கீழடி அருகே பசியாபுரத்தில் நடந்த உறவினரின் காதணி விழாவில் கலந்துகொண்டார்.
விழா முடிந்து நேற்று முன்தினம் மாலை இவரது உறவினர் பசியாபுரம் கதிரேசன் 22, உட்பட 4 பேருடன் கொந்தகை கண்மாயில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் மற்ற நால்வரும் இணைந்து கணேசனை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து கீழடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா, தடயவியல் டி.எஸ்.பி., செல்வகணேஷ், விரல் ரேகை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொலையில் தொடர்புடைய கதிரேசனை கைது செய்த கீழடி போலீசார், மற்ற மூவரை தேடுகின்றனர்.
