/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்
/
கொல்லங்குடியில் பங்குனி தேரோட்டம்
ADDED : மார் 18, 2025 05:58 AM

சிவகங்கை: கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் மார்ச் 9 ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா துவங்கியது. அன்று மாலை அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் துவக்கினர்.
விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மன் ரிஷபம், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
9ம் நாளான நேற்று அதிகாலை 5:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், வெட்டுடையார் காளியம்மன் எழுந்தருளினார். நேற்று காலை 9:15 மணிக்கு கிராமத்தினர் கொடிகளை ஏந்தி நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து, தேர் வடத்தில் கட்டினர். பின்னர் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தேர் புறப்படும் முன் சிதறு தேங்காய் உடைத்தனர். நேற்று காலை 9:33 மணிக்கு அனைத்து பக்தர்களும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர்.
இன்று தீர்த்தவாரி உற்ஸவம்
10 ம் நாளான இன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.
இன்று அதிகாலை 12:00 மணிக்கு பூப்பல்லக்கில் மின் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார். ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், உறுப்பினர்கள் சந்திரன், ராணி சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர்.