ADDED : மே 23, 2025 12:19 AM

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாய்களை தாக்கும் பார்வோ வைரசால், செல்லப் பிராணி வளர்ப்போர் கால்நடை மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர்.
காரைக்குடியில் பலர் தங்களது செல்ல பிராணிகளாக நாய்களை வளர்த்து வருகின்றனர். அதிக வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக மனிதர்களைப் போல் விலங்குகளுக்கும் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக காரைக்குடி, கண்டனுார், கோட்டையூர் பகுதியில் நாய்களுக்கு திடீர் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
குட்டி நாய்களையே அதிகம் தாக்கக்கூடிய இந்த வைரஸ் நோயினால், நாய்கள் தொடர்ந்து வாந்தி எடுத்தல், ரத்தம் கலந்த வயிற்று போக்கு ஆகிய பிரச்னைகளுடன் சுருண்டு விழுகிறது.
இதனால் அச்சமடைந்து செல்லப் பிராணிகள் வளர்ப்போர், வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட தங்களது நாய்களை கால்நடை மருத்துவமனைக்கு சிசிசைக்காக அழைத்துச் செல்கின்றனர்.
வைரஸ் தாக்குதலிலிருந்து நாய்களை பாதுகாக்க சிறப்பு முகாம் அமைத்து, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்: மழைக்காலத்தில் அதிகம் பரவும் இந்த பார்வோ வைரஸ், தற்போது பெய்த திடீர் மழை காரணமாக பரவி வருகிறது.
இந்த வைரசால் நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும். உடனடி சிகிச்சை அளிக்கா விட்டால் இறப்பை கூட நாய்கள் சந்திக்கும்.
குட்டி நாய்களையே அதிகம் தாக்கும். தடுப்பூசி போடாத நாய்களையே இந்த வைரஸ் தாக்கும். மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார்.