/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் பின்னால் நகர்ந்த அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
/
மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் பின்னால் நகர்ந்த அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் பின்னால் நகர்ந்த அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் பின்னால் நகர்ந்த அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
ADDED : பிப் 20, 2025 01:37 AM

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலைப்பாதையில் டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த நிலையில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்.
திருப்புத்துார் அரசு பஸ் டெப்போவில் இருந்து மேலவண்ணாரிருப்பு மலைப்பாதை வழியாக 2 காலாவதி டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஒரு பஸ் பிரேக் பிடிக்காத நிலையில் கண்டக்டர் கல்லை துாக்கிக்கொண்டு பஸ்சின் பின்னால் சென்று நிறுத்தியதும், மற்றொரு நாள் டவுன் பஸ் முன்னோக்கி மேடான பகுதியில் ஏற முடியாமல் பயணிகளை இறக்கி நடக்க விட்டு சிறிது துாரம் சென்றபின் பயணிகள் ஏறிச் சென்ற சம்பவமும் வைரல் ஆனது. தற்போது அதே பாதையில் மீண்டும் அதே பஸ் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்து விபத்தில் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
சிங்கம்புணரியில் இருந்து காலை 9:10 மணிக்கு 20 பயணிகளுடன் புறப்பட்ட அரசு டவுன் பஸ் மேலவண்ணாரிருப்பு மலைப்பாதையில் ஏறியபோது பிரேக் பிடிக்கவில்லை.இதனால் பஸ் பின்னோக்கி இறங்கத் தொடங்கியது. பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். டிரைவர் சாமர்த்தியமாக இடதுபுறம் இருந்த பாறையில் பஸ்சை மோத விட்டு சிறிது துாரத்தில் நிறுத்தினார். இதில் பயணி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
வலதுபுறம் பஸ் சென்றிருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து நேர்ந்திருக்கும். இதைத் தொடர்ந்து பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு வாகனங்களில் சென்றனர். பஸ்சை டிரைவர் சிரமப்பட்டு மலைப்பாதை வழியாக ஓட்டிச் சென்று மறு பக்கம் கீழ் இறக்கி நடுரோட்டில் நிறுத்தினார்.
அவ்வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்புத்துார் டிப்போவில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பஸ் பழுது பார்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
திருப்புத்துார் கிளை மேலாளர் சுரேஷிடம் கேட்டபோது, பஸ்சில் கிளட்ச் ஸ்பிரிங்கில் கோளாறு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. ஏற்கனவே புகார்கள் வந்த நிலையில், 2 மாற்று புதிய பஸ்கள் வந்து விட்டன. பதிவு எண் வந்த பிறகு இயக்கப்படும் என தெரிவித்தார்.

