/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலக்கெடுவையும் தாண்டி மரம் வெட்டியதால் அபராதம்
/
காலக்கெடுவையும் தாண்டி மரம் வெட்டியதால் அபராதம்
ADDED : செப் 21, 2024 05:32 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிரமனுார் கண்மாயில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி கூடுதலான இடத்தில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்தகாரர் 42 லட்ச ரூபாய் அபாராதம் செலுத்த கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிரமனுார் கண்மாயின் உட்புறம் உள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை சார்பில் மதுரையைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இரண்டரை மாதத்திற்குள் நான்கு எக்டேரில் உள்ள நாட்டு கருவேல மரம் மற்றும் வேலி கருவேல மரங்களை வெட்ட அனுமதிக்கப்பட்டது.
அதனையும் தாண்டி ஒப்பந்தகாரர் மேலும் பத்து ஏக்கர் பரப்பளவில் மரங்களை வெட்டியதாக பிரமனுார் மற்றும் வாடி கிராம விவசாயிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழையனுார் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை விசாரணையில் அனுமதிக்கப்பட்ட காலக் கெடுவையும் தாண்டி கூடுதல் பரப்பளவில் மரம் வெட்டியது கண்டறியப்பட்டு கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பினர்.
சிவகங்கை கோட்டாட்சியர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவையும் தாண்டி, கூடுதல் பரப்பளவில் 41 லட்சத்து 29 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளதால் ஒப்பந்தகாரர் அய்யப்பன் அந்த தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளார்.