/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக மக்கள் தவிப்பு
/
திருப்புத்துாரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக மக்கள் தவிப்பு
திருப்புத்துாரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக மக்கள் தவிப்பு
திருப்புத்துாரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு 10 நாட்களாக மக்கள் தவிப்பு
ADDED : மே 13, 2025 06:46 AM
திருப்புத்துார் : திருப்புத்தூரில் பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் மூலம் காவிரி நீர் 2 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. அதில் 10 லட்சம் கொள்ளளவு உள்ள மேல்நிலைத் தொட்டி மூலம் 1000 இணைப்புக்களுக்கும் அதிகமாக உள்ள குடியிருப்புக்களுக்கு விநியோகமாகிறது.
அண்மை காலமாக 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இப்பகுதியில் முற்றிலுமாக தடைபட்டது. குடிநீர் விநியோகப் பாதிப்பு குறித்து பேரூராட்சி தரப்பில் எந்த வித அறிவிப்பும் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தினசரி குழாய்களுக்கு முன் பெண்கள் குடிநீருக்காக காத்திருக்க நேரிட்டது. தெருக்களில் உள்ள சின்டெக்ஸ் தொட்டிகளில் பலரும் நீர் எடுத்துச்சென்றும், விலைக்கு வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர்.
பேரூராட்சி தரப்பில் கூறியதாவது:
காவிரிக்குடிநீர் திட்டக்குழாய்கள் மறு சீரமைப்புக்குப் பின் தரைமட்டத் தொட்டிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வருவதால் பெரிய மேல்நிலைத்தொட்டிக்கு பம்பிங் செய்ய முடியவில்லை. இதனால் சிறு மேல்நிலைத் தொட்டி உள்ள பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் நடக்கிறது.
தற்போது புறவழிச்சாலையில் உள்ள கேட்வால்வில் பழுது நீக்கப்பட்டு, புதுபட்டி தரைமட்டத்தொட்டியிலும் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. மீண்டும் 10 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டிக்கு நீரேற்றப்பட்டு இன்று அல்லது நாளை முதல் குடிநீர் விநியோகம் சீராகும், என்றனர்.