/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கலியநேந்தல் கிராமத்தை காலி செய்யும் மக்கள்
/
கலியநேந்தல் கிராமத்தை காலி செய்யும் மக்கள்
ADDED : நவ 18, 2025 07:01 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே கலியநேந்தலில் அடிப்படை வசதி இல்லாததால் மக்கள் கிராமத்தை காலி செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அரசகுளம் ஊராட்சிக்குட்பட்ட கலியநேந்தல் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகளாக கிராமத்தில் குடிநீர், தெருவிளக்குகள், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.
தற்போது 40க்கும் குறைவான குடும்பத்தினரே வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் போதிய குடிநீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள குளத்தில் இருந்து சுகாதாரமற்ற குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
கலியநேந்தல் கிராம மக்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி எல்லையில் இருக்கும் இந்த கிராமம் 10 ஆண்டுகளுக்கு முன் செழிப்பாக இருந்தது. தற்போது குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகிறோம். குளத்தில் தேங்கும் சுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது.
மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட ரோடு, பஸ் வசதி இல்லை. இந்நிலை தொடர்ந்தால் சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்தில் மக்களே இல்லாமல் போனது போல், இங்கும் மக்கள் காலி செய்யும் நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

