/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதார் சேவைக்காக காத்திருக்கும் மக்கள்
/
ஆதார் சேவைக்காக காத்திருக்கும் மக்கள்
ADDED : மார் 27, 2025 07:06 AM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் அதிகரிக்கும் ஆதார் சேவைகளுக்கு ஏற்ப கூடுதல் ஆதார் மையங்கள் துவக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
ஆதாரில் புதிய பதிவு, பெயர் மாற்றம், அலைபேசி எண் சேர்த்தல், பிறந்தநாள் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திருப்புத்துார் வருகின்றனர். தற்போது ரேஷன்கார்டுகளில் விரல்ரேகை பதிவிற்காகவும் கிராமங்களில் பஸ்சை பிடித்து காலை 6:00 மணிக்கே திருப்புத்தூர் தாலுகா அலுவலகம் வந்து பூட்டிக்கிடக்கும் ஆதார் அலுவலகம் முன் வரிசையில் நிற்கின்றனர். கிராமப்புற அஞ்சலகங்களில் நான்கு மணி நேரமே இயங்கும். அதிலும் பெயர் மாற்றம்,பிறந்தநாள் மாற்றம் செய்வதில்லை.
திருப்புத்துாரில் தாலுகா அலுவலகம், அரசு வங்கி, அஞ்சலகம் ஆகிய இடங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் உள்ளன. இந்த மையங்களை தினமும் 150 பேர் வரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஆனால் அதற்கு மேல் மக்கள் வருவதால், பலர் பதிவு செய்ய முடியாமல் திரும்பச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆதார் பணிகளுக்காக மக்கள் அலையும் சூழ்நிலை தொடர்கிறது.
கண்டரமாணிக்கம் இளங்கோவன் கூறுகையில், அஞ்சலகங்களில் ஆதார் மையங்கள் இருந்தாலும் பலருக்கும் தெரியவில்லை. மேலும் எல்லா அஞ்சலகங்களிலும் ஆதார் சேவைகளும், எல்லா நேரத்திலும் செய்வதில்லை. இதனால் திருப்புத்தூருக்கு வர வேண்டியுள்ளது. கூட்டம் அதிகமான நேரங்களில் கூடுதல் நேரம் ஆதார் மையத்தில் பணியாற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்றார்.
எஸ்.எஸ்.கோட்டை தர்மராஜ் கூறுகையில், பெயர் மாற்றம் செய்ய வந்தேன். காலை 6:00 மணியிலிருந்து வரிசையில் நிற்கிறேன். காலை 9:30 மணிக்கு தான் ஆபீஸ் திறப்பார்கள். ஆதார் பணி அதிகமாக நடக்கிறது. தாலுகா அலுவலக மையத்தில் கூடுதலாக பணியாட்கள் வைத்து கூடுதல் நேரம் பணியாற்றினால் இப்படி நாங்கள் முன்னதாக வந்து காத்திருக்க வேண்டியதில்லை.' என்றார்.
ஆதார் ஆப்பரேட்டர் கூறுகையில், 10 ஆண்டுகளானவர்களுக்கு புதுப்பித்தல் அவசியம் என்பதால் அதிகமானோர் வருகின்றனர். ஆனால் வங்கிகளில் கே.ஓய்.சி., முடித்தவர்கள் ஆதார் புதுப்பிக்க வேண்டியதில்லை. இதனால் ஆன் லைன்' ல் ஆதார் புதுப்பித்தல் தேவையா என்பதை தெரிந்து கொண்டு புதுப்பித்தல்,முகவரி மாற்றம் போன்றவைக்கு கிராமங்களிலுள்ள கணினி மையங்களிலேயே பதிவு செய்யலாம். என்றார்.