/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்த மக்கள்
/
சாலைக்கிராமம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்த மக்கள்
சாலைக்கிராமம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்த மக்கள்
சாலைக்கிராமம் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமித்த மக்கள்
ADDED : அக் 31, 2025 12:36 AM
சாலைக்கிராமம்:  சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க  கிராம மக்களே தங்களது சொந்த செலவில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி துவங்கப்பட்டு 1979ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் தற்போது இளையான்குடி,சாலைக்கிராமம்,சூராணம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில் 21 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்தின் போதும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக இப்பள்ளியில் சேர்ந்து வருவதை தொடர்ந்து கிராம மக்கள் ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் தங்களது சொந்த செலவில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாதந்தோறும் தலா ரூ.8ஆயிரம் சம்பளமாக வழங்கி வருகின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: இப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த நான்கு மாதங்களாக கிராம மக்களே தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கி வரும் நிலையில் இனி வரும் காலங்களிலாவது மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தரமாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

