/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக்கல்லுாரியில் மருந்தாளுனர் பற்றாக்குறை: நோயாளிகள் காத்திருப்பு
/
மருத்துவக்கல்லுாரியில் மருந்தாளுனர் பற்றாக்குறை: நோயாளிகள் காத்திருப்பு
மருத்துவக்கல்லுாரியில் மருந்தாளுனர் பற்றாக்குறை: நோயாளிகள் காத்திருப்பு
மருத்துவக்கல்லுாரியில் மருந்தாளுனர் பற்றாக்குறை: நோயாளிகள் காத்திருப்பு
ADDED : ஜன 03, 2024 06:17 AM
சிவகங்கை: சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மருந்தாளுனர்கள் பற்றாக்குறையால் மருந்து வாங்கும் இடங்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 1000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவக் கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவம், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. உள்நோயாளிகள் பிரிவில் 800 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவிற்கு வரக்கூடிய நோயாளிகள் சிகிச்சை பெறும் போது டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை வாங்க தீவிர சிகிச்சை பிரிவிற்கு அருகாமையில் மருந்து வாங்கும் இடம் (மெடிக்கல்) இல்லை.
115வது வார்டில் இருக்கும் மெடிக்கல் மதியம் 1:30 மணி முதல் காலை 7:00 மணி வரை மட்டும் தான் இயங்குகிறது. காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் எழுதக்கூடிய மருந்துகளை வாங்குவதற்கு புற நோயாளிகள் பிரிவில் செயல்படக்கூடிய மெடிக்கலுக்கு சென்று தான் வாங்க வேண்டும்.
புற நோயாளிகள் பிரிவில் செயல்படும் மெடிக்கலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவசரத்திற்கு மருந்து வாங்க முடியாத சூழல் உள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மருந்து மாத்திரை வாங்கும் நிலை உள்ளது.
இதனால் நோயாளியின் உடல்நிலை மோசமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு தேவையான மருந்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரவிந்த் கூறுகையில், நான் எனது மாமாவிற்கு நெஞ்சு வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தேன். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் டாக்டர் மருந்து எழுதி கொடுத்து இந்த மாத்திரை உடனே சாப்பிட சொன்னார்கள். மாத்திரை வாங்குவதற்கு புறநோயாளிகள் பிரிவில் செயல்படும் மருந்து வழங்கும் இடத்திற்கு சென்று மாத்திரை வாங்கி வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆனது.
அதுவரை டாக்டர் கூறிய மாத்திரையை சாப்பிடாமல் காத்திருக்கும் சூழல் உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தீவிர சிகிச்சை பிரிவிலேயே டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் கல்லுாரி மருந்து கிடங்கு அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், மருத்துவ கல்லுாரியில் மருந்தாளுனர்கள் பற்றாக்குறை உள்ளது. 14 பேர் பார்க்க வேண்டிய வேலையை 9 பேர் தான் பார்க்கிறோம். ஒரு நாளைக்கு புற நோயாளிகள் பிரிவில் 1200 பேருக்கு மருந்து கொடுக்கிறோம். தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகாமையில் வார்டு 115ல் மதியம் 1:30 முதல் தினம்தோறும் மருந்து கொடுக்கப்படும்.
அதற்கு முன்பாக புறநோயாளிகள் பிரிவில் தான் மருந்துகளை வாங்க முடியும் என்றார்.