/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பன்றிகளால் பாலைவனமாகும் விளை நிலங்கள்
/
பன்றிகளால் பாலைவனமாகும் விளை நிலங்கள்
ADDED : ஏப் 07, 2025 06:40 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் பன்றிகளால் விளை நிலங்கள் முழுவதும் பாலைவனமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் வாழை, நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது. காலம் பருவத்தில் பத்தாயிரம் ஏக்கரிலும், கோடையில் 800 ஏக்கரிலும் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு வரை 14 ஆயிரம் எக்டேரில் நடந்து வந்த நெல் விவசாயம் பன்றிகளால் குறைந்து விட்டது. பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பன்றிகள் தொல்லை குறித்து ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. பன்றிகளை பிடித்தால் வனத்துறை, காவல்துறை போட்டி போட்டு வழக்கு பதிவு செய்யும் நிலையில் விவசாயத்தை அழிப்பது குறித்து கவலைப்படுவதில்லை.
மலைப் பகுதியில் விவசாயத்தை அழிக்கும் யானைகளை விரட்டும் வனத்துறை சிவகங்கை மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களில் பன்றிகளை விரட்ட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயி கண்ணன் கூறுகையில்: கண்மாயினுள் உள்ள கருவேல மரகாட்டில் கூட்டம் கூட்டமாக பன்றிகள் உள்ளன. இரவு நேரத்தில் கூட்டமாக வரும் பன்றிகள் நெல்கதிர்களை வேருடன் சாய்த்து விடுகிறது.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் பால் பிடிக்கும் தருணத்தில் ஒன்றரை ஏக்கரில் நெல் கதிர்களை சாய்த்து விட்டது. வைக்கோலுக்கு கூட பயனில்லை.
பன்றிகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடும் கிடையாது. 500 ஏக்கரில் நடந்த விவசாயம் 50 ஏக்கராக சுருங்கியுள்ளது குறித்து அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை, என்றார்.
விவசாயி தண்டீஸ்வரன் கூறும்போது: இரவு நேர காவலுக்கு ஆட்களை நியமித்து நெற்பயிர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை.
விவசாயத்தை விட கூடாது என்ற எண்ணத்தில் தொடர்ந்து செய்கிறோம், பன்றிகளை வனத்துறை வந்து விரட்டலாம் அல்லது பிடித்து செல்லலாம், ஆனால் இதுவரை வனத்துறை பன்றிகளை பிடிக்கவோ விரட்டவோ நடவடிக்கை எடுக்காததுடன் விவசாயிகளிடம் விசாரணை கூட நடத்தவில்லை, என்றார்.
பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவது குறித்து இதுவரை மாவட்ட வனத்துறை சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் திருப்புவனம் பகுதியில் விவசாய நிலங்களே இல்லாத நிலை ஏற்படும்.