/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் குழாய் பதிப்பு பணி: பஸ்கள் நிறுத்தம்
/
மடப்புரத்தில் குழாய் பதிப்பு பணி: பஸ்கள் நிறுத்தம்
மடப்புரத்தில் குழாய் பதிப்பு பணி: பஸ்கள் நிறுத்தம்
மடப்புரத்தில் குழாய் பதிப்பு பணி: பஸ்கள் நிறுத்தம்
ADDED : டிச 27, 2024 05:04 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே ஏனாதி, கணக்கன்குடி செல்லும் ரோட்டில் முன் எச்சரிக்கை இன்றி திடீரென நேற்று காலை குழாய் பதிப்பு பணி தொடங்கியதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பொருட்டு குழாய் பதிப்பு ஒப்பந்தகாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குழாய் பதிக்காமல் திடீரென பணிகளை மேற்கொள்கின்றனர். பணிகள் தொடங்குவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியப்படுத்துவதில்லை. பணிகளை முழுமையாக செய்வதும் இல்லை. குழாய் பதிக்க பள்ளம் தோண்டி அப்படியே விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
பத்து நாட்கள் கழித்து குழாய் பதித்து விட்டு அதனை பழைய முறைப்படி மூடாமல் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். கிராமப்புறங்களில் குறுகிய சாலைகளாக இருக்கும் நிலையில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி அந்த மண்ணை அப்படியே ரோட்டில் போட்டு விடுகின்றனர். திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் வழியாக ஏனாதி, மணல்மேடு, கணக்கன்குடி, சிவகங்கை உள்ளிட்ட ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமங்களுக்கும் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு முறை டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. நேற்று காலை மடப்புரம் அருகே சாலையோர குழாய் பதிப்பு பணி தொடங்கப்பட்டதால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன.
காலையில் டவுன் பஸ்களை நம்பி மதுரைக்கு கூலி வேலை, பள்ளி, கல்லூரி சென்றவர்கள் இரவில் ஊர் திரும்ப சிரமத்திற்குள்ளாக வாய்ப்புண்டு. பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை ரோட்டில் கொட்டியதால் இருசக்கர வாகனங்கள் தவிர எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பூவந்தி, திருமாஞ்சோலை வழியாக ஏனாதி, கணக்கன்குடி, தேளி செல்ல வேண்டியுள்ளது. மூன்று கி.மீ., துாரம் செல்ல வேண்டிய மக்கள் 20 கி.மீ., சுற்றி வரவேண்டியுள்ளது. குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்தவித பதிலும் சொல்ல மறுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் குழாய் பதிப்பு பணியை விரைவாகவும் முழுமையாகவும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

