/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குழாய் பதிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்
/
திருப்புவனத்தில் குழாய் பதிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்
திருப்புவனத்தில் குழாய் பதிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்
திருப்புவனத்தில் குழாய் பதிப்பு: வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : நவ 04, 2025 04:07 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணிகள் உரிய திட்டமிடல் இன்றி நடைபெறுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வைகை ஆற்றில் புதுார், கோட்டை ஆகிய இரு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து மேல் நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு நகர் முழுவதும் 18 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்துடன் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய நகர் முழுவதும் புதிதாக ரப்பர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அழுத்தத்தை வெளியேற்ற ஏர்வால்வு தொட்டி அமைக்கப்படாமல் பல இடங்களில் தொடர்ச்சியாக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் குடிநீர் வினியோகம் தொடங்கப்படாத நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சோதனை ரீதியாக தண்ணீர் திறக்கப்படும் போதே பல இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
திருப்புவனம் -- சிவகங்கை ரோட்டில் வேன் ஸ்டாண்ட் அருகே பல நாட்களாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. பல முறை சரி செய்தும் மீண்டும் மீண்டும் இதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உடைப்பை சரி செய்ய ஒரு வார காலமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இன்று வரை உடைப்பும் சரி செய்யப்படவில்லை. குறுகிய வளைவுப்பகுதியில் உள்ள இந்த பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலூர், சிவகங்கையில் இருந்து வரும் பஸ்கள் இந்த வளைவில்தான் திரும்ப முடியும், ஒரு வாரத்திற்கும் மேலாக திறந்த நிலையில் பள்ளம் இருப்பதால் பஸ்களை திருப்ப முடியவில்லை.
கணக்கன்குடி, மடப்புரம், அங்காடிமங்கலம், ஏனாதி, தேளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் பள்ளத்தால் திருப்ப முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கொச்சியில் இருந்து தொண்டி வரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட நிலையில் இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை அகலப்படுத்தி சென்டர் மீடியனும் அமைத்து கொடுத்தனர். குழாய் பழுது பார்க்கும் பணிக்காக புத்தம் புதிய ரோட்டை சேதப்படுத்தி பணிகள் நடந்து வருகின்றன. திருப்புவனத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிப்பு பணி முறையாக நடைபெறவில்லை. உரிய பொறியாளர்கள் முன்னிலையில் குழாய்கள் பதிக்காமல் ஒப்பந்தகாரர்கள் பணிகளை செய்ததால் தான் பல இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

