/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிளஸ் 2 மாணவி கடத்தலா தவறான செய்தி என மறுப்பு
/
பிளஸ் 2 மாணவி கடத்தலா தவறான செய்தி என மறுப்பு
ADDED : ஆக 12, 2025 03:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் தன்னை 6 பேர் காரில் கடத்திச்சென்றதாகவும், பின் காரில் இருந்து குதித்து தப்பியதாகவும் புகார் கூறி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதியானார். அவரிடம் நடத்திய விசாரணையில் புகாரில் உண்மையில்லை என போலீசார் மறுத்துள்ளனர்.
இம்மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி தன்னை 6 பேர் காரில் கடத்தியதாகவும், சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்ற போது அதில் இருந்து குதித்து தப்பியதாகவும் கூறினார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உறவினர் ஒருவரின் உதவியுடன் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியிடம் பெண் போலீசார் உதவியுடன் டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரணை நடத்தினர். சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பகுதி, சம்பந்தப்பட்ட பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள'சிசிடிவி' காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் புகாரில் உண்மையில்லை என போலீசார் தெரிவித்தனர்.எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கை: வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத 6 நபர் ஒரு காரில் சிறுமியை கடத்தியதாகவும், அந்த சிறுமி சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே காரிலிருந்து குதித்து தப்பி காயம் அடைந்ததாகவும் செய்தி வெளியானது.
இது தொடர்பாக சிவகங்கை டி.எஸ்.பி., மற்றும் போலீசார் 'சிசிடிவி' காட்சிகள் ஆய்வு உள்ளிட்ட விரிவான விசாரணை நடத்தியதில் மேற்கண்டவாறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தெரிகிறது.
சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எந்தவிதமான கடத்தல் அல்லது தாக்குதல் நிகழவில்லை எனவும் உறுதியானது. காவல் துறையினரின் விளக்கத்தை பெறாமல் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு மாறானது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.