/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலையில் போலீசார் சமரச பேச்சு?
/
அஜித்குமார் கொலையில் போலீசார் சமரச பேச்சு?
ADDED : ஜூலை 16, 2025 02:54 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார், 29, கொலையை மறைக்க, சம்பவத்தன்று போலீசார் அஜித்குமாரின் உறவினர்களுடன் பேச்சு நடத்தியதாக தெரிகிறது.
மடப்புரம் கோவிலுக்கு வந்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா, தன் நகைகள் திருடு போனதாக அளித்த புகாரில் அஜித்குமாரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். ஜூன் 28 விசாரணையின் போது, போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
கடந்த ஜூன் 29ல் உடலை வாங்க மறுத்து, மடப்புரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சியினர், போலீசார், அஜித்குமார் உறவினர்களுடன் திருமண மஹாலின் கதவுகளை மூடி விட்டு பேச்சு நடத்தினர்.
அதை அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியாக, தங்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.
இளைஞர்கள் வீடியோ எடுப்பதை பார்த்த, பழையனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஜன்னல் கதவை மூடினார்.
இதையறிந்த, திருமண மஹாலை சுற்றியிருந்த பொதுமக்கள் ஜன்னல் கதவை உடைத்ததுடன் சமாதான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சி.பி.ஐ., விசாரணை தொடங்கிய நிலையில், சமாதான பேச்சில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர், தற்போது மொபைல் போன் பதிவுகளை கசிய விட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கைதான போலீசார் காவலை, ஜூலை 30 வரை நீட்டித்து நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேற்று உத்தரவிட்டார்.