/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கேட்ட இடம் கிடைக்கவில்லை புலம்பும் போலீசார்
/
கேட்ட இடம் கிடைக்கவில்லை புலம்பும் போலீசார்
ADDED : ஆக 23, 2025 05:21 AM
சிவகங்கை : போலீஸ் ஸ்டேஷன்களில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த போலீசாரில் பணியிட மாற்றம் பெற்றவர்களுக்கு கேட்ட இடம் ஒன்று, கிடைத்த இடம் ஒன்றாக இருப்பதாக புலம்பி தவிக்கின்றனர்.
மாவட்ட அளவில் சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார் ஆகிய சப் டிவிஷன்களின் கீழ் 43 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மாவட்ட குற்றப்பிரிவு என பல்வேறு பிரிவுகளில் கிரேடு 2 போலீஸ் முதல் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வரை 3 ஆண்டுக்கு மேல் ஒரே ஸ்டேஷனில் பணிபுரிந்த 205 பேர்களுக்கு வேறு ஸ்டேஷன்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பிருந்த எஸ்.பி., ஆஷிஷ்ராவத், விரும்பிய 3 ஸ்டேஷன்களை மனுக்களாக எழுதி தந்தால், பணியிட மாறுதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கிரேடு 2 போலீசார் முதல் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வரை 3 ஸ்டேஷன்களின் பெயர்களை எழுதி, அதில் ஏதேனும் ஒன்றில் பணியிட மாறுதல் வழங்குமாறு மனு அளித்தனர்.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, ஆஷிஷ் ராவத்தை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றினர். அவரிடம் விருப்ப மனு அளித்தவர்களுக்கு, தற்போதைய எஸ்.பி., சிவபிரசாத் பணியிட மாறுதல் வழங்கியுள்ளார். கிரேடு 2 முதல் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வரை 205 பேர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கிய பணியிட மாறுதல் தான் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்பிருந்த எஸ்.பி., விருப்பமான 3 ஸ்டேஷன்களை மனுக்களாக பெற்றார். ஆனால், தற்போது பணியிட மாறுதல் வழங்கப்பட்டதில், விருப்ப மனுவில் குறிப்பிட்ட ஸ்டேஷன்களுக்கு மாறுதல் வழங்காமல், வேறு ஸ்டேஷன்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் புலம்புகின்றனர்.
குறிப்பாக பெண் போலீசார் குடும்பத்தை விட்டு பிரிந்து மாற்று பணியிடத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.