ஆட்டோ மீது கார் மோதி விபத்து: டிரைவர் பலி
திருக்கோஷ்டியூர்: -திருப்புத்துார் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில், ஆட்டோ டிரைவர் பலியானார். தேவரம்பூர் ஆட்டோ டிரைவர் அர்ச்சுணன் 58. நேற்று மாலை 6:00 மணிக்கு திருப்புத்துார் அண்ணாத்துரை சிலையில் இருந்து வீட்டிற்கு சென்றார். கோட்டையிருப்பில் இருந்து சிவகங்கை ரோட்டிற்கு வரும் பைபாஸ் ரோட்டை கடந்தார். அப்போது மதுரையில் இருந்துவந்த கார் ஆட்டோவில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமுற்ற ஆட்டோ டிரைவர், திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வடமாநில இளைஞர் மீது தாக்கு: 2 பேர் கைது
காரைக்குடி: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தஸ்லீம் அன்சாரி 20. இவர் மதுரையில் தங்கி பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளிக்காக காரைக்குடி பகுதியில் விற்பனையில் ஈடுபட்டார். இவரிடம், காரைக்குடி என்.புதுார் நாகநாதன் மகன் சந்தோஷ்குமார் 21, வசந்த நகர் பழனிக்குமார் மகன் மணி 19, ஆகிய இருவரும் பொருட்களை வாங்கி கொண்டு பணத்தை தராமல், அவரை மிரட்டியதோடு, கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். காரைக்குடி போலீசார், வடமாநில வாலிபரை தாக்கிய இருவரையும் கைது செய்தனர்.
கண்மாய் நீரில் மூழ்கி மாணவர் பலி
திருப்புத்தூர்: திருப்புத்துார் காந்தி நகர் சுல்தான் பாட்சா மகன் மகபூப்ஜான் 15. இவர் பத்தாம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை நண்பர்களுடன் காரையூரில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார்.
நீரில் இறங்கியதும் நீச்சல் தெரியாமல், மகபூப்ஜான் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சீட்டு விளையாடிய மூன்று பேர் கைது
மானாமதுரை: பெரியகோட்டையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிப்காட் போலீசார் ரோந்து சென்று, அங்கு சீட்டு விளையாடிய சீனிவாசன் 65, ராகவேந்திரன் 47, செல்வமணி 43, விஜயன் 68, வாணிக்குமார் 50, பாலசண்முகம் 58, ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து, சீனிவாசன், ராகவேந்திரன், செல்வமணியை கைது செய்தனர்.
பால் வண்டியில் குட்கா கடத்தல்: இருவர் கைது
திருப்புவனம்: திருப்புவனத்தில் பால் வண்டியில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் போலீசார் வாகன சோதனையில், பால் வண்டியில் பால் கேன்களுக்களுக்கு பதில் 92 கிலோ குட்கா மற்றும் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திவந்தது தெரிந்தது.
இதை பால் வண்டியுடன், குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திருப்புவனம் ரமேஷ் 51, மலைச்சாமி 38, இருவரையும் கைது செய்தனர்.