/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம மோதல்களை தடுக்க போலீஸ் அவுட் போஸ்ட்
/
கிராம மோதல்களை தடுக்க போலீஸ் அவுட் போஸ்ட்
ADDED : செப் 26, 2024 04:55 AM
இளையான்குடி: இளையான்குடி அருகே இளமனுார், நாகநாதபுரம்,பெரும்பச்சேரி ஆகிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மோதல்கள் மற்றும் மறியல் போராட்டங்களை தடுக்க அப்பகுதியில் புறநகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இளையான்குடி அருகே மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக பரமக்குடி -நயினார் கோயில் ரோட்டில் உள்ள இளமனுார் மற்றும் நாகநாதபுரம், பெரும்பச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இரு வேறு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ளவர்கள் பரமக்குடி -நயினார் கோயில் ரோட்டில் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் உள்ளவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெரும்பச்சேரி பகுதியில் ஒரு ேஹாட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த மனோபாலன் என்பவரை நாகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக பாண்டியன் என்பவர் கத்தியால் குத்தியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து கத்தியால் குத்திய சண்முக பாண்டியனை போலீசார் கைது செய்த போது போலீசார் அவரது கால்களை உடைத்ததாக கூறி நாகநாதபுரம் கிராம மக்கள் பரமக்குடி-நயினார் கோயில் ரோட்டில் மறியல் செய்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது: அடிக்கடி இப்பகுதியில் ஏற்படும் மோதல்களால் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.இப்பகுதியில் மோதல் ஏற்படும் போது போலீசார் இளையான்குடியிலிருந்து வருவதற்குள் பெரிய மோதலாக மாறிவிடுகிறது.
மேலும் அடிக்கடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஆகவே இப்பகுதியில் மோதல்கள் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்கும் வகையில் உடனடியாக அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

